இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இன்றைய போட்டியில் வென்று தன்னை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தள்ளப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோற்ற நியூஸிலாந்து அணி, ஒருநாள் போட்டித் தொடரில் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இன்றைய போட்டியில் வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும் என்பதால் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை இதில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி உள்ளார். தலைசிறந்த கேப்டன் என்றும், கடைசி நேரத்தில் மின்னல் வேகத்தில் ஆடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தரக் கூடியவர் என்றும் பெயர்பெற்ற தோனி, அந்த 2 விஷயங்களிலும் சில காலமாக திணறி வருகிறார்.
அவரது தலைமையில் சமீபத்தில் இந்திய அணி குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை. கடந்த 18 மாதங்களில் வங்கதேசம், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டித்தொடரை இந்தியா இழந்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை மட்டுமே தோனியின் தலைமையில் இந்தியா வென்றுள்ளது. அதே நேரத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனான விராட் கோலி சமீப காலமாக வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வருகிறார். இதனால் தோனிக்கு பதிலாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் கோலியைக் கேப்டனாக்க வேண்டும் என்ற வேண்டுகோள் வலுத்து வருகிறது.
அதேபோல் தோனியின் பேட்டிங்கும் சமீப காலமாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நியூஸிலாந்துக்கு எதிராக மொகாலியில் நடந்த 3-வது ஒருநாள் போட்டியில் தோனி 80 ரன்களை அடித்ததுதான் சமீபத்தில் அவரது சிறந்த பேட்டிங்காக உள்ளது. இந்நிலையில் தன் பேட்டிங்கை மேம்படுத்திக் கொள்வதுடன், அணியை வெற்றிக்கு வழிநடத்த வேண்டிய மிகப்பெரிய சவால் தோனிக்கு விடப்பட்டுள்ளது. இந்த சவாலை அவர் சமாளிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இந்த மைதானத்தில்தான் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தோனி 148 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா தொடர்ந்து மோசமாக ஆடிவருவது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் முதல் 4 போட்டிகளில் அவர் முறையே 14, 15, 13, 11 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹானே ரன்களை எடுத்தாலும் அதிரடியாக ஆடாதது இந்திய அணியை பாதித்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் சோபிக்காத நிலையில் விராட் கோலியின் பேட்டிங்கையே இந்திய அணி பெரிதும் நம்பியுள்ளது.
பந்துவீச்சைப் பொறுத்தவரை அமித் மிஸ்ரா, அக்ஷர் படேல், கேதார் ஜாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு உதவியாக வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசினால் இந்திய அணி வெற்றிபெற வாய்ப்புள்ளது.
நியூஸிலாந்தை பொறுத்தவரை அந்த அணி இதுவரை இந்தியாவில் ஒருநாள் போட்டித்தொடரை வென்றதில்லை. எனவே இன்றைய போட்டியில் வென்று வரலாறு படைக்கும் கனவில் அந்த அணி உள்ளது. தொடக்க ஆட்டக்காரரான மார்ட்டின் குப்தில் பார்முக்கு திரும்பியிருப்பது
அந்த அணியை உற்சாகப்படுத்தியுள்ளது. அவருக்கு உதவியாக வில்லியம்சன், லதாம் ஆகியோரும் மட்டைவீசும் பட்சத்தில் நியூஸிலாந்தின் வெற்றிக்கனவு நனவாக வாய்ப்புள்ளது.
இன்றைய போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் பட்சத்தில் மழை அதற்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மையத்தால் இன்று விசாகப்பட்டினத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அவர்களின் கணிப்பு பொய்த்து ஆட்டம் நடக்கவேண்டுமே என்ற கவலையில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.