விளையாட்டு

இத்தாலி 4-வது கோப்பை

செய்திப்பிரிவு

18-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2006-ல் ஜெர்மனியில் நடைபெற்றது. அங்கோலா, ஐவரிகோஸ்ட், செக் குடியரசு, கானா, டோகோ, டிரினிடாட் அன்ட் டொபாக்கோ, உக்ரைன், செர்பியா ஆகிய அணிகள் முதல்முறையாக உலகக் கோப்பையில் களம் கண்டன.

நடப்பு சாம்பியன் பிரேசில் இந்த முறையும் கோலோச்சும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலிறுதியில் 0-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது. ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், பிரான்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

பிரான்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல்லை தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. போட்டியை நடத்திய ஜெர்மனி 0-2 என்ற கோல் கணக்கில் இத்தாலியிடம் தோல்வி கண்டு இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல்லை தோற்கடித்தது.

பிரான்ஸும், இத்தாலியும் மோதிய இறுதியாட்டத்தில் கூடுதல் நேரத்தின் முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருக்க, வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் இத்தாலி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டு 4-வது முறையாக உலக சாம்பியன் ஆனது.

இறுதியாட்டத்தின்போது இத்தாலி வீரர் மார்கோ மெடராஸி, அசிங்கமான வார்த்தைகளை உபயோகித்ததாகக் கூறி அவருடைய மார்பில் தலையால் முட்டி கீழே தள்ளினார் பிரான்ஸ் கேப்டன் ஜினெடின் ஜிடேன். இதையடுத்து ஜிடேனுக்கு ரெட் கார்டை காண்பித்த நடுவர் அவரை வெளியேற்றினார். இந்த மோதல் உலகக் கோப்பை வரலாற்றில் மறக்க முடியாத சம்பவமாக அமைந்தது. தொலைக்காட்சி மூலமாக போட்டியைப் பார்த்தவர்களின் எண்ணிக்கையிலும் இந்த உலகக் கோப்பை போட்டி சாதனை படைத்தது.

2006 உலகக் கோப்பை புள்ளி விவரங்கள்

மொத்த ஆட்டம் - 64

மொத்த கோல் - 147

ஓன் கோல் - 4

மைதானத்திற்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 3,352,605

கோலின்றி முடிந்த ஆட்டம் - 7

டிராவில் முடிந்த ஆட்டம் - 15

டாப் ஸ்கோர்

மிரோஸ்லாவ் க்ளோஸ் (ஜெர்மனி) - 5 கோல்

ரெட் கார்டு - 28

யெல்லோ கார்டு - 345

SCROLL FOR NEXT