சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்கடி வோர்கோவிச், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
விஸ்வநாதன் ஆனந்த் கூறும்போது, “ஃபிடே நிர்வாகத்துடன் இணைந்து இந்தியாவில் செஸ் விளையாட்டு வளர்ச்சிக்காக பாடுபடுவேன். தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் செஸ் ஒலிம்பியாட் முழுமையாக வெற்றியடைந்துள்ளது.
செஸ் போட்டியை காண அதிகளவு பார்வையாளர்கள் வந்து சென்றதே இதற்கு சாட்சி. சில மாநிலங்களில் செஸ் விளையாட்டு வலுவாக உள்ளது. சில மாநிலங்களில் பின்தங்கியுள்ளது. அந்த மாநிலங்களில் முன்னேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஃபிடேவில் துணைத் தலைவர் என்பது முதல்படி. இதை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கவேண்டும். தமிழகத்தில் அதிக அளவிலான கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளனர்.
அடுத்த தலைமுறை வீரர்கள் உருவாகி விட்டனர். அவர்களை வைத்து, மேற்கொண்டு எந்த மாதியான முன்னேற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும், சர்வதேச அளவிலான போட்டிகளை இங்கு நடத்துவது குறித்தும் அரசுடன் ஆலோசனை நடத்துவோம் ” என்றார்.
ஆர்கடி கூறும்போது, “ 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெகு சிறப்பாக நடத்தி உள்ளோம். மகளிர் செஸ் மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுப்போம். முதலில் ஃபிடேவின் நிதி நிலையை சீரமைப்போம்” என்றார்.