பர்மிங்கம்: காமன்வெல்த் விளையாட்டுத் தொடரின் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கப் பதக்கம் வென்றார்.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இங்கிலாந்தில் பர்மிங்ஹாம்மில் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி. வி.சிந்து, கனடாவின் மிச்செல்லா லீயை எதிர்கொண்டார்.
பரப்பரப்பாக நடந்த இப்போட்டியில் இந்தியாவின் சிந்து 21-15, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கம் வென்றார்.
காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக தங்கம் வென்றுள்ள பி.வி.சிந்து, “இந்தத் தங்கப் பதக்கத்துக்காவே நீண்ட காலம் காத்திருந்தேன். நான் இப்போது சூப்பர் ஹேப்பி” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
காமன்வெல்த் போட்டிகளின் இறுதி நாளான இன்று பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர், ஆடவர் இரட்டையர் பிரிவுகளிலும் இந்திய வீரர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளதால், இந்தியாவுக்கு மேலும் தங்கப் பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா இதுவரை 19 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கல என மொத்தம் 56 பதக்கங்களுடன் நான்காம் இடத்தில் உள்ளது.
தங்கம் வென்ற சிந்துவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.