எட்ஜ்பாஸ்டன்: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தோல்வியை தழுவியது. இதன் காரணமாக நடப்பு காமன்வெல்த்தில் வெள்ளி வென்றுள்ளது இந்தியா.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் நடப்பு காமன்வெல்த்தில் ஒரு விளையாட்டு பிரிவாக உள்ள கிரிக்கெட்டில் எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
அந்த அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. 22 ரன்கள் எடுத்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் இழந்து தடுமாறியது இந்தியா.
இருந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸும் இணைந்து 96 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத், 43 பந்துகளில் 65 ரன்களை குவித்து அசத்தினார். ஒரு கட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அளவுக்கு ஆட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது இந்திய அணி.
ஆட்டம் மாறியது இங்கே?
ஆனால் நடந்ததோ வேறு. 34 ரன்கள் எடுப்பதற்குள் அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. ஜெமிமா, பூஜா, ஹர்மன்பிரீத், ராணா, ராதா யாதவ, தீப்தி சர்மா, மேக்னா சிங், யஸ்திகா பாட்டியா ஆகியோர் தங்களது விக்கெட்டை இழந்தனர். அது பதட்டத்தினால் களத்தில் தவறுகளை செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணிக்கு சாதகமாக அமைந்தது. 19.3 ஓவர்கள் முடிவில் 152 ரன்களுக்குள் இந்தியா ஆல்-அவுட் செய்தது ஆஸி. அது அந்த அணிக்கு வெற்றியையும் வசப்படுத்தியது.
கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி தங்கமும், இந்தியா வெள்ளியும், நியூசிலாந்து அணி வெண்கலமும் வென்றுள்ளன.