விளையாட்டு

IND vs WI | 5-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி: 4-1 என தொடரை வென்றது

செய்திப்பிரிவு

புளோரிடா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியை இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்தியா.

இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு தொடர்களையும் இந்தியா வென்றுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில் பகுதியில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் ஐந்தாவது டி20 போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர்கள் விளையாடி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. ஷ்ரேயஸ் 64 ரன்களும், தீபக் ஹூடா 38 ரன்களும், ஹர்திக் 28 ரன்களும் எடுத்திருந்தனர்.

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மேற்கிந்திய தீவுகள் அணி விரட்டியது. தொடக்கம் முதலே அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. ஹெட்மயர், 35 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தனர். ரவி பிஷ்னோய், 4 விக்கெட்டுகள் எடுத்திருந்தார். அக்சர் மற்றும் குல்தீப் என இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். 100 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் மேற்கிந்திய தீவுகள் இழந்தது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்தி இருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது இந்தியா.

SCROLL FOR NEXT