விளையாட்டு

‘சதுரங்க பலகையிலும் போர்’ | பயிற்சி கிளப் இல்லை, 2 நாள் விமான பயணம் - பாலஸ்தீன அணி உருக்கம்

செய்திப்பிரிவு

செஸ் ஒலிம்பியாட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 8 வயதான சிறுமி, ராண்டா சேடர் பங்கேற்று விளையாடி வருகிறார். இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்றுள்ள இளம் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதே போன்று ஓபன் பிரிவில் ராண்டாவின் மூத்த சகோதரர் மொகமது சேடர் விளையாடி வருகிறார்.

இவர்களைப் பொறுத்தவரை மோதல் என்பது சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல. இஸ்ரேலுடன் நடந்து வரும் மோதலால் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே பெரிய போர் போன்று உள்ளது. செஸ் விளையாட்டை கற்றுக்கொள்ள பெரிய அளவில் வசதிகள் இல்லாத நாட்டில் இருந்து இவர்கள் பங்கேற்று விளையாடி வருவது கவனம் பெற்றுள்ளது. ராண்டா, மொகமதுவின் தந்தை சேடர் கூறும்போது, “ராண்டா 5 வயதில் விளையாடினார். எனக்கு ராண்டா, மொகமது உள்பட 5 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 பேர் செஸ் விளையாடக்கூடியவர்கள்.

ஆக்கிரமிப்புக்குள்ளான நாட்டில் இருந்து இங்கு வந்து செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்றுள்ளதையும், எங்கள் நாட்டு கொடியை ஏந்திச் சென்றதையும் பெருமையாகவே கருதுகிறோம். மற்ற நாடுகளைப் போன்றே நாங்கள் சுதந்திரமாக இருக்க விரும்புகிறோம் என்பதை இந்த நேரத்தில் உலகுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.

பாலஸ்தீன அணியினருடன் தனது மகள் ராண்டாவை தூக்கி வைத்துள்ள சேடர்.

பாலஸ்தீனம் மகளிர் அணியில் விளையாடி வரும் தக்வா ஹமோரி கூறும்போது, “எங்களது நாட்டில் நாங்கள் பல சிரமங்களை எதிர்கொள்கிறோம். பாலஸ்தீனத்திலிருந்து இந்தியாவுக்குச் செல்ல எங்களுக்கு முழுமையாக இரண்டு நாட்கள் ஆகும், ஏனெனில் ஆக்கிரமிப்பு காரணமாக எங்களுக்கு விமான நிலையம் இல்லை. நாங்கள் ஜோர்டான் வழியாக பயணிக்க வேண்டும்.

காஸாவைச் சேர்ந்த செஸ் வீரர்கள் ஆக்கிரமிப்பு காரணமாக பயணம் செய்ய முடியாததால் இணையதளம் வழியாக பாலஸ்தீன செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாட வேண்டியிருந்தது. அதனால்தான் உங்களால், காஸாவிலிருந்து எந்த வீரர்களையும் ஒலிம்பியாட் போட்டியில் பார்க்க முடியவில்லை. எங்களிடம் போதுமான பயிற்சியாளர்கள் மற்றும் செஸ் கிளப்புகள் இல்லை. பாலஸ்தீன செஸ் கூட்டமைப்பு மட்டுமே தேவையானவற்றை செய்து கொடுக்கிறது” என்றார்.

SCROLL FOR NEXT