இந்தூர் டெஸ்ட் போட்டியில் 188 ரன்கள் எடுத்த அஜிங்கிய ரஹானே தனது சிறந்த சதம் இதுவென்று தெரிவித்துள்ளார்.
“நான் திணறினேன். ஆனால் திணறினேன் என்று சொல்வதில் எந்த ஒரு வெட்கமும் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் போது அதில் சில தருணங்களில் திணறும்போது அதை ஒப்புக் கொள்வதற்கு வெட்கப்படக்கூடாது. ஆனால் காலமும், சூழ்நிலைகளும் மாறக்கூடியவை எப்படி அவர்களை கையாள்வது ஆதிக்கம் செலுத்துவது என்பதே முக்கியம்.
திணறும் போது கூட மகிழ்ச்சியுடன் அந்தச் சவாலை சந்திக்க வேண்டும். ரன்களை சுதந்திரமாக எடுக்க முடியும் போதுதான் நாம் மகிழ்ச்சியுடன் ஆடுவதாக நினைத்தல் கூடாது, கடினமான காலக்கட்டத்தில் எப்படி போராடி வெல்கிறோம் என்பதே மகிழ்ச்சியாகும். நமது விக்கெட்டைக் காப்பாற்றிக் கொள்வது முக்கியம்.
பந்து ஹெல்மெட்டைத் தாக்கட்டும் அது தொலைக்காட்சியில் விகாரமாக தெரியட்டும். அடுத்த பந்தைச் சந்திக்க நாம் அங்கு தயாராக இருக்கிறோம் என்பதே முக்கியம். போராட்டத்திற்குப் பிறகு சதம் எடுப்பது அசாத்தியமானது என்றே கருதுகிறேன். ஒவ்வொரு முறையும் 130-140 பந்துகளில் சதம் எடுக்க முடியாது. சில வேளைகளில் நீண்ட நேரம் ஆடி சதத்திற்கு 200 பந்துகளைக் கூட எடுத்துக் கொள்ளலாம். என்னுடைய வாழ்க்கையில் இந்த இன்னிங்ஸை நான் மிக உயர்ந்த இடத்தில் வைத்துள்ளேன்.
நான் போராடியபோது கோலி மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ளுமாறு என்னிடம் அறிவுறுத்தினார். அவர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி அது நம்மைத் தாக்குகிறது என்பது ஒரு விஷயமல்ல எது முக்கியமெனில் இன்னமும் களத்தில் இருக்கிறோம் என்பதே மறுநாள் ஆடும்போது ஆதிக்கம் செலுத்த இது ஒரு ஆயத்தமாகும்” என்றார் ரஹானே.