விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் | ஓபன் பிரிவில் இந்திய அணிகள் இன்று நேரடி மோதல்

செய்திப்பிரிவு

சென்னை: செஸ் ஒலிம்பியாட்டில் ஒருநாள் ஓய்வுக்குப் பின்னர் 7-வது சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெறுகிறது. இதில் ஓபன் பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா ஏ – இந்தியா சி அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரி கிருஷ்ணா பென்டலா (2720 ரேட்டிங் புள்ளிகள்), விதித் குஜராத்தி (2,714), அர்ஜுன் எரிகைசி (2689), எஸ்.எல்.நாராயணன் (2659), சசிகிரண் (2638) ஆகியோரை உள்ளடக்கிய இந்தியா ஏ அணி 10 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது. இந்த அணி ஜிம்பாப்வேவை 4-0 என்ற கணக்கிலும் மால்டோவாவை 3.5-0.5 என்ற கணக்கிலும், கிரீஸை 3-1 என்ற கணக்கிலும் ருமேனியாவை 2.5-1.5 என்ற கணக்கிலும் வீழ்த்தியிருந்தது. பிரான்ஸ், உஸ்பெகிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தை தலா 2-2 என்ற கணக்கில் டிரா செய்திருந்தது.

அதேவேளையில் இந்திய சி அணி 10 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளது. இந்த அணியில் கங்குலி சூர்யா சேகர் (2608), எஸ்.பி.சேதுராமன் (2623), குப்தா அபிஜீத் (2627), கார்த்திகேயன் முரளி (2613), அபிமன்யு (2612) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய சி அணி தெற்கு சூடானை 4-0 என்ற கணக்கிலும், மெக்சிகோவை 2.5-1.5 என்ற கணக்கிலும், ஐஸ்லாந்தை 3-1 என்ற கணக்கிலும் தோற்கடித்தது. ஸ்பெயினிடம் 2.5-1.5 என்ற கணக்கில் தோல்வி கண்டது. சிலியை 2.5-1.5 என்ற கணக்கிலும், லிதுவேனியாவை 3.5-0.5 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.

இந்தியா ஏ, இந்தியா சி ஆகிய இரு அணிகளிலும் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள். இதனால் இன்றைய ஆட்டம் கவனம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT