விளையாட்டு

CWG 2022 | குரூப் சுற்றில் கனடாவை 8-0 கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணி

செய்திப்பிரிவு

பர்மிங்கம்: நடப்பு காமன்வெல்த் போட்டிகளுக்கான ஹாக்கி விளையாட்டின் குரூப் சுற்றில் கனடாவை 8-0 என்ற கோல் கணக்கில் இந்திய ஆடவர் அணி வீழ்த்தி உள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும்.

குரூப் ‘பி’ சுற்று போட்டியில் இந்தியா, கனடாவை இன்று (ஆகஸ்ட் 3) எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் பந்தை வலைக்குள் தள்ளி, கோலாக மாற்றுவதில் குறியாக இருந்தனர். அதன் வெளிப்பாடாக ஆட்டத்தின் தொடக்கம் முதல் பந்தை தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் இந்திய வீரர்கள்.

ஹர்மன்பிரீத் மற்றும் ஆகாஷ்தீப் ஆகியோர் தலா இரண்டு கோல்களை பதிவு செய்தனர். அமித், லலித், குர்ஜன்த், மந்தீப் ஆகியோர் தலா ஒரு கோலை பதிவு செய்தனர். நாளை இந்திய அணி வேல்ஸ் அணிக்கு எதிராக குரூப் சுற்றின் கடைசி போட்டியில் விளையாடுகிறது. முன்னதாக, கானா அணிக்கு எதிரான போட்டியில் 11-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியை 4-4 என ஆட்டம் சமனில் நிறைவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியின் மூலம் மொத்தம் 7 புள்ளிகள் பெற்று, கோல்களின் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி ‘பி’ குரூப்பில் முதலிடத்தில் உள்ளது இந்தியா. இந்திய அணிக்காக இந்த மூன்று போட்டிகளையும் சேர்த்து அதிகபட்சமாக 6 கோல்களை பதிவு செய்துள்ளார் ஹர்மன்பிரீத்.

மறுபக்கம் இந்திய மகளிர் ஹாக்கி அணி நடப்பு காமன்வெல்த் தொடரில் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 5-ம் தேதி நடைபெறும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா.

SCROLL FOR NEXT