விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் 2022 | பிரெயிலி பலகையில் விளையாடும் நடாஷா

பெ.மாரிமுத்து

சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார் பார்வை திறன் குறைந்த போர்ட்டோ ரிகோ நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நடாஷா மோரல்ஸ் சாண்டோஸ்.

24 வயதான நடாஷாவுக்கு இதுவரை இந்தத் தொடர் கலவையாக அமைந்துள்ளது. முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனையான குல்ருக்பெகிம் டோகிர் ஜோனோவாவிடம் தோல்வியடைந்த நடாஷா அடுத்த சுற்றில் கேப் வெர்டே வீராங்கனையான ஸ்பினோலா திவானியாவை தோற்கடித்தார். 3வது சுற்றில் பின்லாந்தின் நசரோவாவிடம் தோல்வியடைந்தார். நேற்று 4-வது சுற்றில் டிரினிடாட் & டொபாகோவின் லா ஃப்ளூர் ஜாராவுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

நடாஷா கூறும்போது, “என்னால் இடது கண்ணால் பார்க்க முடியாது, நான் பிறந்ததிலிருந்தே அப்படித்தான் உள்ளேன். மேலும், எனது வலதுபுற கண் 25 சதவீத பார்வை திறன் மட்டுமே கொண்டது. நான் எனது நகர்வுகளை பிரெயிலி சதுரங்கப் பலகையில் (பார்வை குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டது) செய்கிறேன். எனது நகர்வுகளை எதிரணியின் வீராங்கனைக்கு தெரிவிக்கும் வகையில் எனது தரப்பில் ஒருவர் இருப்பார். இதேபோன்று அவர், எதிரணியின் வீராங்கனையின் நகர்வுகளையும் எனக்கு தெரிவிப்பார். அதற்கு தகுந்த வகையில் என்னை உஷார்படுத்திக்கொள்வேன்” என்றார்.

நடாஷாவுக்கு 12-வது வயதில்தான் செஸ் விளையாட்டு அறிமுகமாகி உள்ளது. இதன் பின்னர் விரைவாக முன்னேற்றம் காணத் தொடங்கிய நடாஷா 1,924 ரேட்டிங் புள்ளிகளை குவித்து அணியில் உள்ள மற்ற வீராங்கனைகளை விட முதலிடத்தில் உள்ளார்.

SCROLL FOR NEXT