பர்மிங்ஹாம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் லான் பவுல்ஸ் பிரிவு இறுதிச் சுற்றில் விளையாட இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்நிலையில் நேற்று லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் காமன்வெல்த் தொடரில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியின்போது லவ்லி சவுபே , பிங்கி, நயன்மோனி சைகியா, ரூபா ராணி டிர்க்கி ஆகியோர் அடங்கிய இந்திய மகளிர் அணி 16-13 என்ற புள்ளிகள் கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிச் சுற்றில் நுழைந்தது. இதையடுத்து இந்திய அணி இறுதிச் சுற்றில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கவுள்ளது.
ஆடவர் 81 கிலோ பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீரர் அஜய் சிங் 4-வது இடம் பிடித்து மயிரிழையில் வெண்கலப் பதக்கத்தைத் தவறவிட்டார்.
அவர் ஸ்னாட்ச் பிரிவில் 143 கிலோ, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 176 கிலோ என மொத்தம் 319 கிலோ தூக்கி ரசிகர்களை ஏமாற்றினார். இதில் இங்கிலாந்தின் கிறிஸ் முர்ரே (325 கிலோ) தங்கமும், ஆஸ்திரேலியாவின் கைல் புரூஸ் (323 கிலோ) வெள்ளியும், கனடாவின் நிக்கோலஸ் வச்சன் (320 கிலோ) வெண்கலமும் வென்றனர்.
மகளிர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா 9-11, 5-11, 13-15 என்ற கணக்கில் கனடாவின் ஹொலி நாட்டனிடம் தோல்வி கண்டார்.
ஜூடோவில் பதக்கம்
மகளிர் ஜூடோ 48 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை சுசீலா தேவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆடவர் 57 கிலோ பெதர்வெயிட் குத்துச்சண்டைப் போட்டியின் கால் இறுதிக்கு இந்திய வீரர் முகமது ஹுசாமுதீன் முன்னேறியுள்ளார். அதேபோல் ஆடவர் 51 கிலோ பிளைவெயிட் பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் ஆர்ட்டிஸ்க் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை பிரணதி நாயக் 5-வது இடம் பிடித்து பதக்கம் பெறும் வாய்ப்பை நழுவவிட்டார். 2019, 2022-ல் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பிரணதி வெண்கலம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டேபிள் டென்னிஸ் ஆடவர் அரையிறுதிப் போட்டியில் பிரிவில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டு வீரர்கள் சத்யனும் ஷரத்தும் நைஜீரியாவுக்கு எதிராக விளையாடினர். இதில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தனர்.
ஆடவர் 80 கிலோ குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் ஆஷிஷ் குமார் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
பேட்மின்டன் கலப்பு அணி பிரிவில் சிங்கப்பூருக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பதக்கத்தை உறுதி செய்தது. அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவு பேட்மின்டன் போட்டியில் லக்ஷ்யா சென் நேர் செட்களில் வெற்றி பெற்றுள்ளார்.