மொஹாலியில் 4-ம் நிலையில் தோனி களமிறங்கி விளாசியதால் இந்திய வெற்றி சுலபமானது என்று கூறிய கங்குலி அவர் தொடர்ந்து அந்த டவுனில்தான் ஆட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
தொடர்ந்து தோனி இதே 4-ம் நிலையில் இறங்குவார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. அனில் கும்ப்ளே, தோனியை இதே நிலையில் களமிறங்க வலியுறுத்த வேண்டும். இதனால் அவருக்கும் எளிதாகிறது, பின்னால் வருபவர்களுக்கும் எளிதாகிறது. அவர் கடைசி 3 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளி ஒரு சதம் கூட எடுக்கவில்லை. காரணம் 40-50 பந்துகளையே அவர் எதிர்கொள்ள முடிகிறது. இது அவரது திறமைக்கு ஊறுவிளைவித்ததோடு அணியின் வெற்றித்திறமைகளுக்கும் ஊறு விளைவித்துள்ளது.
அவர் எப்போதும் ஆட்டத்தை வெற்றியுடன் முடிப்பது பற்றியே பேசுகிறார், இன்றும் அவர்தான் ஆட்டத்தை முடித்தார். 4-ம் நிலையில் அவர் அபாரமாக ஆடினார்.
கோலியின் அதிரடி 154 நாட் அவுட் பற்றி...
இது அசாதாரணமானது, அவர் பேட்டிங் செய்வதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அவரைப் பற்றி புகழ எனக்கு வார்த்தைகளே வறண்டு விட்டது. மிகப்பெரிய இன்னிங்ஸ். அவர் இப்படியே ஆட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இவர் வெறும் சதங்கள் மட்டும் எடுப்பதில்லை, ஆட்டத்தை வென்று கொடுக்கிறார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா என்று எங்கும் ஆடுகிறார்.
இந்த அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, தோனி ஆகியோர் சிறந்த ஒருநாள் வீரர்கள். கோலி மற்றவர்களைக் காட்டிலும் பல மைல்கள் தொலைவில் உள்ளார். துணைக்கண்டத்திற்கு வெளியே தோனி சதம் எடுத்ததாக நினைவில் இல்லை. ஆனால் கோலி எல்லா இடங்களிலும் சதம் எடுக்கிறார். ரோஹித் சர்மாவும் ஆஸ்திரேலியாவில் சதம் எடுத்தார், ஆனால் யாரும் கோலியின் பக்கத்தில் நிற்க முடியாது.
இவ்வாறு கூறினார் கங்குலி.