இந்திய மகளிர் அணியின் சி பிரிவில் இடம் பெற்றுள்ள பி.வி.நந்திதா ஹாட்ரிக் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் ஹாங் காங்கின் டி ஜிங் ஜின் கிறிஸ்டலையும், 2-வது சுற்றில் சிங்கப்பூர் வீராங்கனை இமானுவலையும், தோற்கடித்திருந்தார் நந்திதா.
நேற்று 3-வது சுற்றில் நந்திதாவை எதிர்த்து விளையாட இருந்த ஆஸ்திரியாவின் சியாரா கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் நந்திதா ஹாட்ரிக் வெற்றி பெற்றார். இதுகுறித்து நந்திதா கூறும்போது, “சியாரா எதற்காக விலகினார் என்பது எனக்கு தெரியவில்லை.
இந்த ஆட்டத்துக்கு முழு அளவில் தயாராகி வந்திருந்தேன். விளையாடாமல் புள்ளியை பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை. எனினும் அணியின் ரீதியாக பார்க்கும் போது இந்த புள்ளி, மற்ற வீராங்கனைகள் அழுத்தம் இல்லாமல் விளையாட உதவும்.
முதல் இரு ஆட்டங்களிலும் கிடைத்த வெற்றி குறித்து கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை. எனினும் முதல் இரு வெற்றிகளும் அடுத்து வரும் ஆட்டங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும் என்று கருதுகிறேன்.
போட்டியின் தினத்தில் எப்படி செயல்படுகிறோம், ஆட்டத்தை எந்த வகையில் ஆழமாக கொண்டு செல்கிறோம் என்பதை பொறுத்துதான் வெற்றி அமையும். எங்கள் அணி மீது நம்பிக்கை உள்ளது. ஒவ்வாரு ஆட்டத்திலும் சிறப்பாக விளையாட முயற்சி செய்வோம். வரும் சுற்றுகள் கடினமாக இருக்க வாய்ப்புள்ளது” என்றார்.