கோவை: கோயம்புத்தூர் ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், ‘இந்திய தேசிய ராலி சாம்பியன்ஷிப் 2022’ கார் பந்தயப் போட்டி, கோவையில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் நாடு முழுவதும் இருந்து மொத்தம் 8 அணிகள் சார்பில் 54 வீரர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகள் ‘ராலி சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘சேலஞ்ச்’ என இரண்டு பிரிவுகளில் நடக்கிறது. நேற்றைய இரண்டாவது நாள் போட்டி, கேத்தனூர் பகுதியில் உள்ள பந்தய சாலையில் நடந்தது.
இதில் ஐ.என்.ஆர். சி 2-வது பிரிவில், சேத்தன் சிவ்ராம் முதலிடத்தையும், ஐ.என்.ஆர்.சி 3-வது பிரிவில் ஜஹான் கில் முதலிடத்தையும், ஐ.என்.ஆர். சி 4-வது பிரிவில் தீபக் சந்திரா முதலிடத்தையும், ஜூனியர் ஐ.என்.ஆர்.சி பிரிவில் ஜஹான் கில் முதலிடத்தையும், ஜிப்சி பிரிவில் சாம்ராஜ் யாதவ் முதலிடத்தையும் பிடித்தனர்.
கரடு முரடான பந்தய சாலையில் கௌரவ் கில் முதலிடத்தை பிடித்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. அடுத்த சுற்றுகள், பெங்களூரிலும், நாகலாந்திலும் நடைபெறும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.