மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் இந்தியா சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. ஆகஸ்ட் 18, ஆகஸ்ட் 20 மற்றும் ஆகஸ்ட் 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள போட்டிகள் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல் போன்ற முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடர், டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இவர்களுக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகள் தொடரில் இந்திய அணியை வழிநடத்திய ஷிகர் தவண் மீண்டும் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டுவந்த தீபக் சாஹர் அதற்கு சிகிச்சை பெற்றுவந்தார். இதனால் நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் சாஹர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் தான் காயம் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இவரைப் போலவே தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார். ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றிருந்த ராகுல் திரிபாதியும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது இவரின் முதல் சர்வதேச ஒருநாள் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தவிர இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படவில்லை.
இந்திய அணி விவரம்: ஷிகர் தவான் (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் , தீபக் சாஹர்.