விளையாட்டு

செஸ் ஒலிம்பியாட் 2022 | அமெரிக்க அணியுடன் விளையாடுவது சவால்: ரவுனக் சத்வானி

செய்திப்பிரிவு

அமெரிக்க அணி வீரர்களுடன் விளையாடுவது சவால் அளிக்கும் விஷயமாகும் என்று இந்திய செஸ் வீரர் ரவுனக் சத்வானி கூறினார்.

சென்னை செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய பி அணி வீரர் ரவுனக் சத்வானி, ஐக்கிய அரசு அமீரக வீரர் அப்துல் ரஹ்மான் முகமது அல் தஹெருடன் மோதினார்.

இதில் ரவுனக் சத்வானி வெற்றி பெற்றார்.வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் சத்வானி கூறும்போது, “முதல் சுற்றிலேயே வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இது வரவிருக்கும் சுற்றுகளில் எதிரணி வீரர்களை எதிர்கொள்வதற்கு நேர்மறையான சிந்தனையை அளிக்கும்.
வரவிருக்கும் சுற்றுகளில் அமெரிக்க அணியை எதிர்கொள்வது சவாலான விஷயமாக இருக்கும்.

அந்த அணியில் தரவரிசையில் முன்னணியில் உள்ள வீரர்கள் அதிகம் பேர் உள்ளனர். அவர்களுடன் விளையாடுவது சவாலான விஷயம்தான். என்னுடைய இந்த முதல் சுற்றின் வெற்றி அடுத்த சுற்றுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

எங்களுக்கு மிகவும் சிறந்த பயிற்சியாளராக ரமேஷ் கிடைத்துள்ளார். அவருக்கு எங்கள் நன்றி.அடுத்து வரும் அனைத்து சுற்றுகளையுமே நாங்கள் தீவிரமான சிரத்தையுடன் விளையாடுவோம். பதக்கம் பெறுவதுதான் எங்கள் இலக்கு" என்றார்.

SCROLL FOR NEXT