ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொட ரில் மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களை எடுத்து வலுவான நிலை யில் உள்ளது.
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நாட்டின் பல பகுதிகளில் நடந்து வருகி கின்றன. இதில் தமிழகம் - மத்தியப் பிரதேசம் அணிகளுக்கு இடையே யான போட்டி கட்டாக் நகரில் நடந்தது. டாஸில் வென்ற மத்தி யப் பிரதேச அணியின் கேப்டன் பண்டேலா, தமிழகத்தை முதலில் பேட் செய்யப் பணித்தார். இதைத் தொடர்ந்து ஆடவந்த தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர் களான வாஷிங்டன் சுந்தரும், அபினவ் முகுந்தும் ரன் ஏதும் எடுக்காமலேயே அவுட் ஆனார்கள். இதனால் 2 விக்கெட் இழப்புக்கு 1 ரன் என்று தமிழகம் திணறியது.
இந்த நிலையில் கவுசிக் காந்தி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்க முயன்றார். அவரும் விஜய் சங்கரும் (41 ரன்கள்) சேர்ந்து 3-வது விக்கெட்டுக்கு 52 ரன்களைச் சேர்த்தனர். விஜய் சங்கர் அவுட் ஆன பிறகு ஆடவந்த தினேஷ் கார்த்திக் 95 ரன்களை சேர்த்து தமிழகத்தைக் கரை சேர்த்தார்.
கவுசிக் காந்தி மற்றும் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான பேட்டிங்கால் தமிழக அணி நேற்று ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்களைச் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. கவுசிக் காந்தி 71 ரன்களுடனும், பாபா இந்திரஜித் 44 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
மற்றொரு போட்டியில் ரயில்வே அணி மேற்கு வங்கத்தை 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக்கியது. இதைத்தொடர்ந்து ஆடிய ரயில்வே அணி 4 விக்கெட் இழப்புக்கு 37 ரன்களை எடுத்திருந்தது.