நடப்பு காமன்வெல்த் போட்டிகளுக்கான இந்திய அணியில் 14 வயதான இளம் வீராங்கனை அனாஹத் சிங் இடம்பெற்றுள்ளார். இவர்தான் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளில் மிகவும் இளம் வயதுக்காரர். அவர் குறித்து விரிவாக பார்ப்போம்.
இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் தொடங்கியுள்ளது. இந்தியா உட்பட சுமார் 72 காமன்வெல்த் நாடுகளை சேர்ந்த சுமார் 6500 வீரர்களும், வீராங்கனைகளும் இதில் பங்கேற்றுள்ளார்கள். நேற்று (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது.
இதில் இந்தியா சார்பில் சுமார் 106 வீரர்கள் மற்றும் 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்று விளையாட உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் அனாஹத் சிங்.
யார் இவர்? - தலைநகர் டெல்லியை சேர்ந்தவர் அனாஹத் சிங். மிக இளம் வயதில் நாட்டுக்காக காமன்வெல்த்தில் விளையாடும் பெருமையை பெற்றுள்ளார் அனாஹத். டெல்லி சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள ‘தி பிரிட்டிஷ்’ பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
ஸ்குவாஷ் விளையாட்டில் இவர் கில்லி. 8 வயதில் இந்த விளையாட்டை விளையாடத் தொடங்கியுள்ளார். அவர் அண்டர் 11 வயது பிரிவில் விளையாடிய காலத்தில் இருந்தே தனது அபார ஆட்டத்தால் பார்வையாளர்களின் கவனத்தை தன் பக்கமாக திருப்பி உள்ளார்.
இதுவரை தேசிய அளவிலான போட்டிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட சாம்பியன் பட்டங்களை அவர் வென்றுள்ளார். அதுவே அதற்கு உதாரணம். 15 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் ஆசிய அளவில் அவர் தான் முதலிடத்தில் உள்ளார். அதோடு 2019 பிரிட்டிஷ் ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் மற்றும் 2021 அமெரிக்க ஜூனியர் ஸ்குவாஷ் ஓபன் தொடரிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். ஸ்குவாஷ் விளையாட்டில் அறிமுகமான ஆறு ஆண்டுகளில் மொத்தம் 8 சர்வதேச தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
“விளையாட்டு சார்ந்துதான் எனது கரியர் இருக்கும் என்பதை நான் முடிவு செய்திருந்தேன். ஆனால் நான் முதலில் பேட்மிண்டன் விளையாட்டில் கவனம் செலுத்தி வந்தேன். எனது சகோதரி ஸ்குவாஷ் விளையாடி வந்தார். அவருக்கு கம்பெனி கொடுக்கும் விதமாக நானும் ஸ்குவாஷ் விளையாடத் தொடங்கினேன். ஒரு கட்டத்தில் ஸ்குவாஷ் விளையாடுவதுதான் சரியாக இருக்கும் என முடிவு செய்து தொழில்முறை பயிற்சி எடுக்க தொடங்கினேன். எனது முயற்சிக்கு எங்கள் குடும்பம் பக்கபலமாக இருந்தது” என ஸ்குவாஷ் விளையாட்டுக்குள் என்ட்ரி கொடுத்த கதையை விவரிக்கிறார் அனாஹத் சிங்.
ஜூனியர் லெவலில் அவரது அசத்தலான ஆட்டம் காரணமாக காமன்வெல்த்தில் விளையாட தகுதி பெற்றுள்ளார். இதுதான் அவர் சீனியர் பிரிவில் விளையாடும் முதல் தொடர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரையலில் தேர்வானதும் முதலில் கொஞ்சம் அச்ச உணர்வுடன் இருந்துள்ளார். ஏனெனில் இந்திய அணியின் சூப்பர் சீனியரான ஜோஷ்னா சின்னப்பா, சீனியரான சுனைனா குருவில்லா போன்ற வீராங்கனைகள் உள்ளனர். இதில் குருவில்லாவுடன் மகளிர் இரட்டையர் பிரிவில் விளையாட உள்ளார் அனாஹத்.
முதலில் தனக்கு சீனியர் வீரர்களுடன் விளையாடுவது கொஞ்சம் கவலையாக இருந்ததாகவும், தேசிய முகாமில் பயிற்சியின்போது அவர்களுடனான அறிமுகத்தின் மூலம் அணியில் தன்னை தகுந்த வகையில் பொருத்திக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார் அனாஹத்.
இன்று நடைபெறும் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவுக்கான ‘ரவுண்ட் ஆப் 64’ ஆட்டத்தில் கரீபியன் தீவுகளை சேர்ந்த SVG அணி வீராங்கனை ஜடா ரோஸுக்கு எதிராக விளையாட உள்ளார் அனாஹத். தான் இதில் பங்கேற்று விளையாட மிகவும் ஆர்வமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆல் தி பெஸ்ட் அனாஹத்.