செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஓபன் பிரிவில் பதக்கத்தைக் கைப்பற்றும் உறுதியுடன் அமெரிக்க அணி கள மிறங்கியுள்ளது. அந்த அணி 2,772 ரேட்டிங் புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.
இந்தியா அதை விட 75 புள்ளிகள் பின்தங்கி 2-வது இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன் நார்வே அணி உள்ளது. 2016-ல் தங்கம் வென்ற அமெரிக்கா, 2018-ல் வெள்ளியைக் கைப்பற்றியது.
தற்போது சென்னை வந்துள்ள பல்வேறு வீரர், வீராங்கனைகளில் உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஃபேபியானோ கரவுனா (அமெரிக்கா), 5-வது இடத்தில் இருப்பவரான லெவன் அரோனியன் (அமெரிக்கா) ஆகியோர் அணியின் சொத்துகளாக உள்ளனர்.
அரோனியன் தனது சிறப்பான ஆட்டத்தால் 2006, 2008, 2012-ம் ஆண்டுகளில் நடந்த செஸ் ஒலிம்பியாட்டில் அமெரிக்காவுக்கு வெற்றி தேடித் தந்தார். இம்முறை அமெரிக்க அணி ஃபிடே மூத்த பயிற்சியாளர் ஜான் டொனால்ட்சன் தலைமையில் களம் காண்கிறது.
அணியில் இவர்கள் தவிர வெஸ்லி சோ, டொமினிகுயஸ் பெரஸ், சாம் ஷாங்க் லேண்ட் ஆகியோரும் இணைந்து அணிக்கு பலம் சேர்க்கின்றனர். மகளிர் பிரிவில் அமெரிக்க அணி தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளது. இந்தப்பிரிவில் இந்தியா முதலிடத்திலும், 2-வது இடத்தில் உக்ரைனும், 3-வது இடத்தில் ஜார்ஜியாவும் உள்ளன.
அமெரிக்கமகளிர் அணியில் வீராங்கனைகள் குல்ருக்பெஜிம் டோக்ஹிர்ஜோனோ, காரிஸா இப் ஆகியோர் எதிரணி வீராங்கனைகளுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடக் கூடியவர்கள். இவர்களுக்கு உறுதுணையாக அன்னா ஜடோன்ஸ்கி, டாட்டேவ் ஆப்ரஹாம்யான் ஆகியோர் களம் கண்டுள்ளனர்.