விளையாட்டு

இந்தியா - மே.இ. தீவுகள் இன்று மோதல்

செய்திப்பிரிவு

போர்ட் ஆஃப் ஸ்பெயின்: ஷிகர் தவண் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் ஆட்டத்தில் 3 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. தொடரை வென்றுவிட்டதால் இந்திய அணி எந்தவித அழுத்தமும் இல்லாமல் இந்த ஆட்டத்தை அணுகுகிறது.

இதனால் பெஞ்ச் வலிமையை சோதிக்கும் வகையில் முதல் இரு ஆட்டங்களிலும் வெளியே அமரவைக்கப்பட்டிருந்த வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும். இந்த வகையில் ஷுப்மன் கில்லுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் விளையாடும் லெவனில் இடம் பெறக்கூடும். இதேபோன்று சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும். சூர்யகுமார் யாதவ் இரு ஆட்டங்களிலும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. பந்து வீச்சிலும் ஒரு சில மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அவேஷ் கான் அல்லது ஷர்துல் தாக்குருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் இடம் பெறக்கூடும்.

SCROLL FOR NEXT