சென்னை: உலக அளவில் விளையாட்டு, பொழுதுபோக்கு துறையில் முன்னணியில் உள்ள நிறுவனம் ஹாஸ்ப்ரோ (Hasbro). இது ‘மேஜிக்: தி கேதரிங்’, ‘நெர்ஃப்’, ‘மை லிட்டில் போனி’, ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’, ‘மோனோபோலி’, ‘பேபி அலைவ்’, ‘பவர் ரேஞ்சர்ஸ்’ என்பது உட்பட 1,500-க்கும் மேற்பட்ட பிராண்டுகளில் பிரபலமான விளையாட்டுகளைக் கொண்டுள்ளது.
கடந்த 2021 தொடக்கத்தில் ‘மோனோபோலி டீல்’ கார்டு விளையாட்டை இந்தியில் அறிமுகம் செய்த இந்நிறுவனம் தற்போது கிளாசிக் ‘மோனோபோலி’, ‘கேம் ஆஃப் லைஃப்’, ‘மோனோபோலி டீல்’ கார்டு கேம் ஆகியவற்றை முழுக்க முழுக்க தமிழில் அறிமுகம் செய்துள்ளது. தென்னிந்திய மொழிகளிலேயே தற்போது தமிழில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு, மலையாளம், கன்னடத்தில் ஓரிரு மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து ஹாஸ்ப்ரோ நிறுவனத்தின் தெற்காசிய பொது மேலாளர் பவேஷ் சோமயா கூறும்போது, ‘ஹாஸ்ப்ரோவில் நுகர்வோரை மையமாக வைத்தே எல்லா செயல்பாடுகளையும் மேற்கொள்கிறோம். அனைவருக்கும் தங்கள் சொந்த மொழியில் விளையாடுவதைவிட வேறு என்ன மகிழ்ச்சி இருக்கப்போகிறது. இதன்மூலம் குழந்தைகள், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தில் அனைவருக்கும் அற்புதமான விளையாட்டு அனுபவத்தை தர முடியும். இது விளையாட்டு அடிப்படையிலான கற்பித்தலை வளர்க்கவும் உதவுகிறது” என்றார்.
ஹாஸ்ப்ரோ இந்தியாவின் வணிக இயக்குநர் லலித் பர்மர் கூறியதாவது:
தாய்மொழியில் விளையாட்டில் ஈடுபடும்போது, அதன் மதிப்பு ஒப்பிட முடியாதது. அதனாலேயே எங்களது மிகவும் பழம்பெரும் விளையாட்டுகளான ‘மோனோபோலி’, ‘கேம் ஆஃப் லைஃப்’ ஆகியவற்றை தமிழில் வெளியிட முடிவுசெய்தோம். கிளாசிக் ‘மோனோபோலி’ போர்டு கேம், ‘மோனோபோலி டீல்’ கார்டு கேம் அதிகம் உள்ளுர்மயமாக்கப்பட்டுள்ளன, அந்த விளையாட்டுகளில் ரசிகர்கள் தமிழகத்தின் சிறந்த நகரங்கள், சுற்றுலா தலங்களில் சொத்து வாங்கலாம், விற்கலாம், வர்த்தகம் செய்யலாம். மேற்கண்ட 3 விளையாட்டுகளும் 8 வயது முதல் அனைவரும் விளையாடலாம். தமிழில் அறிமுகம் செய்யப்படும் ‘மோனோபோலி போர்டு கேம்’ ரூ.1,199, ‘மோனோபோலி டீல்’ கார்டு கேம் ரூ.299, ‘கேம் ஆஃப் லைஃப்’ ரூ.1,599 என்ற விலையில் கிடைக்கிறது. இதற்கான வழிமுறை கையேடும் முற்றிலுமாக தமிழில் வழங்கப்பட்டுள்ளன. இதனால், பெற்றோர் தங்கள்குழந்தைகள் விளையாடும்போதுதமிழ் படிக்க, பேச, பயிற்சி செய்ய ஊக்குவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.