புதுடெல்லி: உலக தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து 22 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் ஹரியாணாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதால், இவர் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தகுதிச் சுற்றில் தனது முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தூரத்துக்கு நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்து, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் நீரஜ் சோப்ரா சிறப்பாகச் செயல்பட்டார். அவர் 88.13 மீட்டர் தூரம்ஈட்டி எறிந்து, இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதன்மூலம் அவர் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதே பிரிவில் கிரெனடாவைச் சேர்ந்த நடப்பு சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் முதலிடம் பிடித்து, தங்கம் வென்றார். இவர் 90.54 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து,சாதனை படைத்தார். செக். குடியரசு வீரர் ஜாக்கப் வாட்லெஜ் 88.09 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலத்தை வசப்படுத்தினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்தியா ஒருமுறை மட்டுமே பதக்கம் வென்றுள்ளது. 2003-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்ற போட்டியில் இந்திய வீராங்கனை அஞ்சுபாபி ஜார்ஜ் நீளம் தாண்டுதலில் பதக்கம்வென்றிருந்தார். அதன்பிறகு, இதுவரை எந்த இந்தியருமே உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வெல்லவில்லை. அந்த ஏக்கத்தை 19 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்த்து, வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார் நீரஜ் சோப்ரா.
இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் ரோஹித் யாதவ் 10-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அவர் 78.72 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தார்.
தற்போது தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன் மூலம் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற 2-வது இந்திய வீரர் மற்றும் முதல் ஆண் தடகள வீரர் என்ற பெருமையையும் நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா முதல் தங்கத்தை வென்றார். 2008-ம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு, ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற 2-வது இந்தியர் நீரஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
‘வாகை சூட வாழ்த்துகள்’: இதற்கிடையில், வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தநீரஜ் சோப்ராவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “எங்கள் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீரர்களில் ஒருவரால் இன்று மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சாதனை படைத்து, வெள்ளிப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ்சோப்ராவுக்கு வாழ்த்துக்கள். இந்தியவிளையாட்டுக்கு இது ஒரு சிறப்பான தருணமாகும். வரவிருக்கும் போட்டிகளிலும் நீரஜ் சோப்ரா வாகை சூட எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
இதுதவிர, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர், முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாமகதலைவர் அன்புமணி, வி.கே.சசிகலா மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோரும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.