விளையாட்டு

கவுன்டி கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை அள்ளிய வாஷிங்டன் சுந்தர்

செய்திப்பிரிவு

நார்த்தாம்ப்டன்: தனது முதல் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர். அவரது வழியில் மற்றொரு இந்திய வீரரான நவ்தீப் சைனியும் தனது முதல் கவுன்டி போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்து நாட்டில் கவுன்டி சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரரும், தமிழகத்தை சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர், லங்காஷயர் கவுன்டி கிரிக்கெட் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

தற்போது அந்த அணி நார்தம்ப்டன்ஷயர் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டி 19-ம் தேதி தொடங்கியது. இதில் அறிமுக வீரராக களம் கண்டார் வாஷி. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 22 ஓவர்கள் வீசி 76 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் அவர். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் இன்னும் பந்து வீசவில்லை.

அதேபோல மற்றொரு இந்திய வீரரான நவ்தீப் சைனி, இதே தொடரில் கென்ட் அணிக்காக தனது முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். 18 ஓவர்கள் வீசி 4 மெய்டன் எடுத்துள்ளார் அவர். 72 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

SCROLL FOR NEXT