விளையாட்டு

கோலிக்கு ஆதரவாக இன்ஸ்டாவில் போஸ்ட் செய்த பீட்டர்சன்: ரியாக்ட் செய்த ஜோகோவிச்

செய்திப்பிரிவு

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் பகிர்ந்திருந்தார். அதற்கு டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ரியாக்ட் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரரான விராட் கோலி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு ஓய்வு அளிப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் இது ஓய்வா அல்லது அவர் அணியில் இருந்து டிராப் செய்யப்பட்டுள்ளாரா என்ற விவாதம் இப்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது. கடந்த சில போட்டிகளாக அவர் ரன் சேர்க்க தடுமாறி வருகிறார். அவரது மோசமான ஃபார்ம் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் அவருக்கு ஆதரவாகவும் கிரிக்கெட் உலகில் குரல்கள் ஒலித்து வருகின்றன.

அவருக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "நண்பா, இந்த விளையாட்டில் உங்களது ஆட்டத்தை மற்றவர்களால் நினைத்து பார்க்க மட்டுமே முடியும். அதை எண்ணி பெருமிதம் கொள்ளுங்கள். நிமிர்ந்த நடையுடன் வாழ்க்கையை அனுபவியுங்கள். கிரிக்கெட் பபூளை கடந்து இன்னும் நிறைய உள்ளது. நீங்கள் மீண்டு வருவீர்கள்" என சொல்லி இருந்தார் பீட்டர்சன்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட இந்த போஸ்டுக்கு இதுவரை சுமார் 4.53 லட்சம் லைக்குகளை கடந்துள்ளது. அதில் 21 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச்சும் ஒருவர். இது தவிர விராட் கோலியும் இந்த பதிவை லைக் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT