விளையாட்டு

காயத்திலிருந்து குணமடையாததால் பிரெஞ்ச் ஓபனில் ரோஜர் பெடரர் விலகல்

பிடிஐ

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணம் ஆகாததால் நாளை தொடங்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து சுவிட்சர்லாந்தின் முன்னணி வீரரான ரோஜர் பெடரர் விலகியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூலில், ‘‘பிரெஞ்ச் ஓபன் போட்டியில் விளையாடப் போவதில்லை என்கிற முடிவை எடுத்துள்ளேன். உடற்தகுதியில் நல்ல முன்னேற்றம் கண்டுவந்தாலும் இன்னும் நூறு சதவீத உடல் தகுதியை அடையவில்லை. நான் முழுவதுமாக தயாராகும் முன்பு விளையாடச் சென்றால் அது சரியான முடிவாக இருக்காது. பாரிஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த வருடம் நிச்சயம் பங்குபெறுவேன்" என்று கூறியுள்ளார்.

டென்னிஸ் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள 34 வயதான பெடரருக்கு இந்த மாதம் நடைபெற்ற மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின்போது முதுகுப் பதியில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் அந்த போட்டியிலிருந்து விலகினார். பிறகு ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் விளையா டினார்.

இதற்கு முன்பு 1999 யு.எஸ். ஓபன் போட்டியில் காயம் காரணமாக பெடரர் கலந்துகொள்ளவில்லை. அதன்பிறகு 17 வருடங்கள், 65 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்குப் பிறகு இப்போதுதான் கிராண்ட்ஸ்லாம் போட்டியை அவர் தவறவிடுகிறார்.

பெடரர் விலகியுள்ளதால் ஸ்பெயினின் ரபேல் நடால் பிரெஞ்சு ஓபனில் 4-வது தரநிலை அந்தஸ்தை பெற்றுள்ளார். செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, நடப்பு சாம்பியனான ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ஆகியோர் முதல்மூன்று இடங்களில் உள்ளனர்.

இதனால் இவர்கள் 3 பேரையும் நடால் அரையிறுதிக்கு முந்தைய சுற்றுவரை எதிர்கொள்ள வாய்ப்பில்லை. சமீபகாலமாக தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்து வரும் நடால், பிரெஞ்சு ஓபனில் 9 முறை பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கி தடையை எதிர்கொண்டுள்ள ரஷ்ய நட்சத்திர வீராங்கனை மரியா ஷரபோவா, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ஆகி யோர் பிரெஞ்சு ஓபனில் விளையாடாத நிலை யில் தற்போது பெட ரரும் விலகியுள் ளதால் போட்டி அமைப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT