வரும் ஜூன் 10-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை லண்டனில் நடைபெறும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக நட்சத்திர கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ட்ரைக்கர் எஸ்.வி.சுனில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியின் தடுப்பாட்ட வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் மிக அருமையாக ஆடியதால் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
மலேசிய ஹாக்கி தொடரில் விளையாடாத வி.ஆர்.ரகுநாத் மீண்டும் அணிக்குள் வர, ஸ்ரீஜேஷ் தலைமையில் வலுவான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு செல்கிறது.
தனது புதிய பொறுப்பு பற்றி கேப்டன் ஸ்ரீஜேஷ் கூறும்போது, “சாம்பியன்ஸ் டிராபியில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கத்துடன் வெற்றி பெற்றால் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட அதுவே தன்னம்பிக்கை அளிக்கும்” என்றார்.
தலைமைப் பயிற்சியாளர் ரூலண்ட் ஆல்ட்மான்ஸ் கூறும்போது, இந்தத் தொடரை வெல்வது மட்டுமல்ல நோக்கம் புதிய உத்திகளை செயல்படுத்துவதும் குறிக்கோளாகும், மேலும் கடந்தகால தவறுகளை திருத்திக் கொண்டு மேலும் வளர்ச்சியடையும் பாதையில் பயணிக்கவே இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் உதவும், என்றார்.
அணி விவரம்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (கேப்டன்), விகாஸ் தாஹியா, பிரதீப் மோர், வி.ஆர்.ரகுநாத், கோதாஜித் சிங், சுரேந்தர் குமார், ஹர்மன்பிரீத் சிங், டேனிஷ் முஜ்தபா, சிங்லென்சானா சிங் காங்குஜம், மன்பிரீத் சிங், எஸ்.கே.உத்தப்பா, தேவிந்தர் சுனில் வால்மிகி, ஹர்ஜீத் சிங், தல்வீந்தர் சிங், மந்தீப் சிங், எஸ்.வி. சுனில், ஆகாஷ்தீப், நிகின் திம்மையா.