ஆண்டின் 2-வது கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று தொடங்குகிறது. இந்த தொடரானது ஜூன் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் 9 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான ஸ்பெயினின் ரபேல் நடால், இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே, ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா உள்ளிட்ட முன்னணி வீரர்களும், மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ், விக்டோரியா அசரென்கா, அக்னீஸ்கா ரந்த்வன்ஸ்கா, சிமானோ ஹாலப் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பலர் இந்த தொடரில் பங்கேற்கின்றனர்.
நடால்
பிரெஞ்சு ஓபனில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த நடால், கடந்த முறை காலிறுதியோடு வெளியேறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவர் பட்டம் வெல்லவில்லை. எனவே இந்த முறை பிரெஞ்சு ஓபனில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறார்.
அதேநேரத்தில் 11 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான ஜோகோவிச், இதுவரை பிரெஞ்சு ஓபனில் மட்டும் வென்றதில்லை. இந்த முறை பிரெஞ்சு ஓபனில் வென்று கேரியர் கிராண்டஸ்லாம் (4 கிராண்ட்ஸ்லாமிலும் பட்டம் வெல்வது) வென்றவர் என்ற சாதனையை படைக்க காத்திருக்கிறார். ஜோகோவிச் தனது முதல் சுற்றில் சீன தைபேவின் லூ யென் சன்னை சந்திக்கிறார். காலிறுதியில் ஜோகோ விச்சும், செக்குடியரசின் தாமஸ் பெர்டிச்சும் சந்திக்க வாய்ப்புள்ளது.
போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள நடால் தனது முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் சாம் குரோத்தை எதிர்கொள்கிறார். காலிறுதியில் நடாலும், பிரான்ஸின் ஜோ வில்பிரட் சோங்காவும் சந்திக்க வாய்ப்புள்ளது.
ஆன்டி முர்ரே
இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே தனது முதல் சுற்றில் தகுதி நிலை வீரரான செக்குடியரசின் ரடெக் ஸ்டெபனேக்கை எதிர்கொள்கிறார். காலிறுதியில் முர்ரேவும், 6-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரியும் மோத வாய்ப்புள்ளது.
நடப்பு சாம்பியான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா தனது முதல் சுற்றில் செக்குடியரசின் லூகாஸ் ரோஸலை சந்திக்கிறார். வாவ்ரிங்கா தனது காலிறுதியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சுடன் மோத வாய்ப்புள்ளது. அரையிறுதியில் முர்ரேவும், வாவ்ரிங்காவும் மோதலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் பிரிவு
மகளிர் பிரி வைப் பொறுத் தவரையில் உலகின் முதல் நிலை வீராங் கனையான அமெ ரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் ஸ்லோ வேக் கியாவின் ரைபரி கோவாவை சந்திக்கிறார்.
34 வயதான செரீனா, அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற ஸ்டெபி கிராப்பின் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் உள்ளார். ஸ்டெபி கிராப் 22 பட்டங்கள் வென்றுள்ளார். பிரெஞ்சு ஓபனில் 14 முறை பங்கேற்றுள்ள செரீனா 3 முறை பட்டம் கைப்பற்றியுள்ளார். 2002-ல் முதல்முறை யாக பட்டம் வென்ற அவர் அதன் பின்னர் 10 ஆண்டு இடைவேளைக்கு பின்னர் 2013 மற்றும் 2015-ல் கோப்பைபை வென்றிருந்தார்.
செரீனா இந்த முறை பட்டம் வெல்வது அவ்வளவு எளிதானதாக இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. கடந்த 9 மாதத்தில் செரீனா ஒரே ஒரு போட்டியில் மட்டுமே கோப்பை வென்றார். அதுவும் கடந்த வாரம் நடைபெற்ற இத்தாலி போட்டியில் தான். காலிறுதியில் பெலாரஸின் விக்டோரியா அசரென்காவுடன் செரீனா மோத வாய்ப்புள்ளது.
செரீனாவை தவிர ஜெர்மனியின் ஏஞ்சலிக் ஹெர்பர், செக்குடியரசின் பெட்ரா விட்டோவா, ஸ்பெயினின் முகுருஸா, ருமேனியாவின் சிமோனா ஹாலப், போலந்தின் அக்னீஸ்கா ரந்த்வன்ஸ்கா, பெல்லாரசின் விக்டோரியா அசரென்கா மற்றும் இளம் வீராங்கனையான அமெரிக்காவின் மேடிஸன் கெய்ஸ், இத்தாலியின் ரோபர்ட்டா வின்ஸி ஆகியோரும் முன்னணி வீராங்கனைகளாக உள்ளனர்.
பரிசுத் தொகை
பிரெஞ்சு ஓபன் போட்டியின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.242 கோடியாகும். இதில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் பட்டம் வெல்பவருக்கு தலா ரூ.15 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும்.
பிரெஞ்சு ஓபனில் ஜோகோவிச்
நம்பர் ஒன் வீரரான 29 வயதான ஜோகோவிச் பிரெஞ்சு ஓபனில் 11 முறை பங்கேற்றுள்ளார். இதில் அதிகபட்சமாக அவர் 3 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில் கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். 4 முறை அரையிறுதியுடன் வெளியேறி உள்ளார். இம்முறை கோப்பை வெல்லும் முனைப்புடன் உள்ளார். கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் வாவ்ரிங்காவிடம் ஜோகோவிச் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய ஆட்டங்கள்
மகளிர் பிரிவு:
பெட்ரா விட்டோவா-கோவினிக், கார்பைன் முகுருஸா-அனா கரோலினா, சிமோனா ஹாலப்-ஹிபினோ, குஸ்நட்சோவா-ஷெவ்டோவா
ஆடவர் பிரிவு:
நிஷிகோரி-சிமோன் போலி, ஜெர்மி ஜார்டி-லியோனார்டோ மேயர், பெனோயிட் பேர்-ரடு அல்போட், மிலோஸ் ரயோனிக்-டிப் சார்விக், ஜான் இஸ்நர்-ஜான் மிலன், பெஞ்ஜமின் பெக்கர்-ஆந்த்ரே குஸ்நட்சோவ், எலினா வெஸ்னினா-மேடிசன் பிரிங்கிள்.