எல்.ஒய்.எஃப். ஸ்மார்ட்போன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் அஸ்வின் ஹிந்திப்படம் ஒன்றின் ‘லுங்கி’ டான்ஸை ஆடி குழுமியிருந்தவர்களை உற்சாகப்படுத்தினார்.
விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புனே கேப்டன் தோனி கலந்து கொள்ளவில்லை. சமூக ஊடகம் ஒன்றில் நடத்தப்பட்ட போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை புனே வீரர்கள் சந்திக்க வேண்டும் என்பதே ஏற்பாடு.
இந்த நிகழ்ச்சியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ‘லுங்கி’ டான்ஸ் ஆடினார். இதனை இர்பான் பதான், ஜார்ஜ் பெய்லி, உஸ்மான் கவாஜா, பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோர் கரகோஷத்துடன் பாராட்டி மகிழந்தனர்.
சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுமார் 60 நேயர்கள் பங்கேற்றனர். இவர்களின் முதல் கேள்வியே ‘எங்கே தோனி?’ என்பதே.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் உடனடியாக இதற்கு பதில் அளித்த போது, “அவர் வேறு ஒரு முக்கியமான வேலையில் ஈடுபட்டுள்ளார். அவர் இருந்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் களைகட்டியிருக்கும்.” என்றார்.
கேள்விகளைத் தொகுப்பாளரேக் கேட்க பங்கேற்பாளர்கள் பதில் அளிக்க வேண்டும்.
அதாவது வீரர்களின் பிறந்த தேதி, கிரிக்கெட் தவிர வீரர்கள் விரும்பி ஆடும் மற்ற விளையாட்டுகள், சமீபத்தில் வீரர்கள் சந்தித்த முக்கிய நிகழ்வுகள் என்ன, பெற்றோர் பெயர், பவுலிங் பாணி, ஸ்டீபன் பிளெமிங்கின் உயரம் என்று கேள்விகள் பலவாறு அமைந்தன. ஆனால் இந்தக் கேள்விகளுக்கு பங்கேற்றவர்கள் பதில் அளிக்க வீரர்களுக்கே ஆச்சரியமான அனுபவமாக அமைந்தது.
இதில் கிடைத்த சுவையான தகவல்களில் சில:
ஸ்டீபன் பிளெமிங்கிற்கு ரக்பி, பெய்லிக்கு டென்னிஸ் ஆகிய ஆட்டங்களை ஆடப்பிடிக்கும். பிளெமிங்கின் உயரம் 6 அடி 3 அங்குலம். ஜார்ஜ் பெய்லி முன்னால் டெஸ்ட் வீரர் ஜார்ஜ் ஹெர்பர்ட் பெய்லியின் பேரன். அஸ்வினுக்கு 14 வயதில் காயம் ஏற்பட்டது, அவர் பி.டெக் படித்தவர் தற்போது எம்.பி.ஏ. பட்டம் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இர்பான் பதானுக்கு சமீபத்தில் திருமணம் முடிந்தது.
தன் பற்றிய கேள்விக்குப் பதில் அளித்த அஸ்வின் வெற்றி பெற்ற நபருக்கு தனது அணி தொப்பியை பரிசாக வழங்க ஜார்ஜ் பெய்லி தன் பற்றிய கேள்விக்கு பதில் அளித்து வென்றவருக்கு மாலையிட்டார்.