பெங்களூருவில் நடைபெறும் ஐபிஎல் முதல் பிளே ஆஃப் போட்டியில் முதலில் பேட் செய்து வரும் குஜராத் லயன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை சடுதியில் இழந்து திணறி வருகிறது.
டாஸ் வென்ற விராட் கோலி முதலில் ரெய்னா தலைமை குஜராத் லயன்ஸை பேட் செய்ய அழைத்தார். லயன்ஸ் அணியில் எரோன் பிஞ்ச், மெக்கல்லம் இறன்ங்கினர்.
ஆட்டத்தின் 2-வது ஓவரை இக்பால் அப்துல்லா என்ற இடது கை சுழற்பந்து வீச்சாளரிடம் கோலி அளிக்க அந்த ஓவரில் பிஞ்ச் மற்றும் மெக்கல்லத்தை பெவிலியன் அனுப்பினார் அவர்.
மெக்கல்லம் மிகவும் ஈஸி, மேலேறி வந்து நேராக குறிபார்த்து டீப் கவரில் டிவில்லியர்ஸ் கையில் கேட்ச் ஆனார். 1 ரன்னில் மெக்கல்லம் அவுட். இதே ஓவரில் ஏரோன் பிஞ்ச் 4 ரன்கள் எடுத்த நிலையில் சற்றே திரும்பிய பந்தை பிளிக் செய்ய முயன்றார் பந்து ஸ்லிப்பில் கெயிலிடம் கேட்ச் ஆனது.
சுரேஷ் ரெய்னா இறங்கி 9 பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில் வாட்சன் வீச அழைக்கப்பட்டார். ரெய்னாவின் ஷார்ட் பிட்ச் பலவீனம் ஊரறிந்த விஷயம்தானே! ரெய்னாவின் மார்பளவு உயரத்தில் ஒரு பவுன்சரை ஷேன் வாட்சன் வீச அதனை சரியான நிலையில் வரமுடியாமலேயே புல் ஆட முயன்றார். ஷார்ட் பைன் லெக்கில் கேட்ச் ஆனது. 1 ரன்னில் கேப்டன் வெளியேறினார்.
இவ்வளவு பயிற்சியாளர்கள், இந்திய அணிக்கு ஆடிய அனுபவம் ஆகியவை இருந்தும் இன்னமும் ஷார்ட் பிட்ச் பந்தை ஆட முடியாமல் ரெய்னா தவிப்பது அதிசயிக்கத்தக்கதே.
தற்போது டிவைன் ஸ்மித் அதிரடி அரைசதம் எடுத்து 56 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 23 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்க குஜராத் அணி 13 ஓவர்களில் 89/3 என்று உள்ளது.
இந்தப் போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.