விளையாட்டு

பரபரப்பான கடைசி ஓவரில் டிரா செய்த இலங்கை; இங்கிலாந்துக்கு ஏமாற்றம்

செய்திப்பிரிவு

லார்ட்சில் நடைபெற்ற இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நேற்று பரபரப்பான முறையில் எத்தரப்பிற்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

ஆட்டத்தின் கடைசி ஓவர், இலங்கை 201/8 என்று இருக்கிறது. கடைசி ஓவரை வீச வருகிறார். ஸ்டூவர்ட் பிராட், பேட்டிங் செய்பவர் ரெங்கன்னா ஹெராத்.

பிராட் பவுன்சரை வீச இடது கை வீரரான ஹெராத்திற்கு லெக் திசையில் பந்து எழும்புகிறது. அவரது கிளவ்வில் பட்டு மேட் பிரையரிடம் கேட்ச் ஆகிறது. நடுவர் பால் ரெய்ஃபல் அவுட் என்று கையை உயர்த்துகிறார், ஹெராத் ரிவியூ செய்யாமல் நடையைக் கட்டுகிறார். ஆனால் ரீப்ளேயில் பந்து மட்டையைக் கடக்கும்போது ஹெராத் கையை விலக்கிக் கொள்கிறார்.

அவர் அவுட் இல்லை. ஆனால் அவுட் என்று நினைத்து வெளியேறுகிறார்.

201/9 என்ற நிலையில் இன்னும் 5 பந்துகளை எதிர்கொள்ள நுவான் பிரதீப் வருகிறார். அனைத்து ஃபீல்டர்களும் மட்டைக்கு அருகில் நிற்க பதட்டமான நிலையில் பிரதீப் 4 பந்துகளை எப்படியோ கழித்து விட்டார். 5வது பந்து இன் கட்டராகி பிரதீப் கால்காப்பைத் தாக்க நடுவர் கையை உயர்த்துகிறார். இங்கிலாந்து வீரர்களிடையே வெற்றிக் கொண்டாட்டம் துவங்கியது.

ஆனால் நுவான் பிரதீப் ரிவியூ செய்தார். அதில் பந்து அவரது மட்டையின் உள் விளிம்பில் பட்டு பேடில் படுகிறது ஆகவே நாட் அவுட். கடைசி பந்தும் மட்டையின் விளிம்பில் பட்டு இரண்டாவது ஸ்லிப்பிற்குச் செல்கிறது. ஆனால் பந்து தரையில் பட்டுச் செல்கிறது. இங்கிலாந்தின் வெற்றிக் கனவு தகர்ந்தது. இலங்கை ஒருவழியாக டிரா செய்தது.

ஆனால் 5ஆம் நாள் 390 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இலங்கை மிகவும் தன்னம்பிக்கையுடன் ஆடியது. உணவு இடைவேளையின் போது 99/1 என்று இருந்தது. தேநீர் இடைவேளையின் போது164/3 என்று இருந்தது. பெரிய பிரச்சினையில்லாமல் டிரா ஆகும் என்ற நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அபாரமான ஒரு ஸ்பெல்லில் இலங்கை பேட்டிங் வரிசையை ஊடுருவினார்.

ஆட்டத்தின் 59வது ஓவரில் இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டாவது முறையாக அற்புதமாக ஆடி வந்த சங்கக்காரா, ஆண்டர்சன் வீசிய பந்தை முன்னால் சென்று மட்டையின் மையப்பகுதியில் தடுத்தாடுவதற்குப் பதிலாக இல்லாத பேக்ஃபுட் டிரைவிற்குச் சென்று பந்து மட்டையின் உள் விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது.

அதே ஓவரின் 5வது பந்தில் திரிமன்ன 2 ரன்களில் எட்ஜ் செய்து வெளியேறினார். விக்கெட் கீப்பர் ஜெயவர்தனே ஜோர்டான் பந்தில் எல்.பி. ஆனார். குலசேகரா பிராடின் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு எல்.பி. ஆனார். கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸ் 18 ரன்னில் குக்கிடம் கேட்ச் கொடுத்து ஆண்டர்சனிடம் ஆட்டமிழந்தார். 201/8 என்று ஆனது. அப்போது 87 ஓவர்கள் முடிவடைந்திருந்தது. மீதமுள்ள 3 ஓவர்களில் ஒரேயொரு விக்கெட்டை மட்டுமே இலங்கை இழந்தது. அதுவும் நாட் அவுட். ரிவியூ செய்யாமல் சென்றார் ஹெராத். நுவான் பிரதீப் ரிவியூ செய்து இங்கிலாந்து வெற்றிக் கனவைத் தகர்த்தார்.

சங்கக்காரா முதல் இன்னிங்ஸில் சதம், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம், மேத்யூஸின் முதல் இன்னிங்ஸ் சதம், 4ஆம் நாள் ஹெராத், எரங்கா வீசிய அருமையான பந்து வீச்சு, இவ்வளவு இருந்தும் ஜோ ரூட் அடித்த இரட்டை சதத்திற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

SCROLL FOR NEXT