லண்டன்: நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார் ஜோகோவிச். இது அவர் வெல்லும் 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். அதோடு ஏழாவது முறையாக ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார் அவர்.
கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்புக்கான நடப்பு தொடர் இங்கிலாந்தில் கடந்த ஜூன் 27-ம் தேதி தொடங்கியது. இதில் டென்னிஸ் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்று விளையாடினர்.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பிய நாட்டு வீரர் ஜோகோவிச் (35 வயது) மற்றும் ஆஸ்திரேலிய நாட்டு வீரர் நிக் கிர்கியோஸ் (27 வயது) ஆகியோர் விளையாடினார். பரபரப்பாக தொடங்கிய இந்த ஆட்டத்தின் முதல் செட்டை நிக், 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இருந்தும் அதற்கடுத்த அனைத்து செட்டுகளையும் தன் வசம் தக்க வைத்தார் ஜோகோவிச். 6-3, 6-4, 7-6 (7/3) என்ற செட் கணக்கில் ஆட்டத்தையும், பட்டத்தையும் வென்றார்.
விம்பிள்டன் அரங்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அவர் வென்றுள்ள ஏழாவது பட்டம் இது. 2018, 2019, 2021 மற்றும் 2022 என தொடர்ச்சியாக நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் அவர். 2020-இல் விம்பிள்டன் தொடர் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 21-கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை இப்போது வென்றுள்ளார் ஜோகோவிச். இருந்தாலும் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்களில் நடாலை சமன் செய்ய அவருக்கு மேலும் ஒரு பட்டம் தேவைப்படுகிறது. நடால் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச்சுக்கு 20 லட்சம் பவுண்ட் ஸ்டெர்லிங் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.