எட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்திலும் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியை இந்தியா வென்ற நிலையில் இன்று இரண்டாவது ஆட்டம் பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
முதல் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் இருந்து நான்கு மாற்றங்களை செய்திருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அதன்படி, ரிஷப் பந்த், விராட் கோலி, பும்ரா, ஜடேஜா ஆகியோர் அணியில் இடம்பிடித்தனர். விராட் கோலி ஓப்பனிங் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சர்ப்ரைஸாக ரிஷப் பந்த் உடன் ஓப்பனிங்கில் களம் கண்டார் ரோஹித். முதல்போட்டியை போலவே அதிரடியை கையாளவும் செய்தார் அவர்.
ரிஷப்பும் அவருக்கு சளைக்காமல் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிட, ஓவருக்கு 10 ரன் ரேட்டில் ஸ்கோர் உயர்ந்தது. பவர்பிளேவை நன்றாக பயன்படுத்திய அவர்களின் பவர்பிளேயின் கடைசி பந்தில் பிரிந்தது. இங்கிலாந்தின் அறிமுக பந்துவீச்சாளர் ரிச்சர்ட் க்ளெஸ்ஸன் தனது முதல் விக்கெட்டாக 31 ரன்கள் எடுத்திருந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை வெளியேற்றினார்.
அவரை மட்டுமல்ல, 26 ரன்கள் ரிஷப்பையும், விராட் கோலியை ஒரே ரன்னிலும் அவுட் ஆக்கி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் ரிச்சர்ட் க்ளெஸ்ஸன். அடுத்தடுத்து வந்த முக்கிய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இரட்டை இலக்கங்களை தொட்டாலும் பெரிய ஸ்கோர் எடுக்கத் தவறினர். ரவீந்திர ஜடேஜா மட்டும் இறுதிநேரத்தில் அதிரடியாக விளையாடி நாட் அவுட் பேட்ஸ்மானாக 46 ரன்கள் சேர்த்தார். அவரின் உதவியால் இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது.
எட்டக்கூடிய இலக்கை நோக்கி இங்கிலாந்து இன்னிங்ஸை தொடங்கியது. கடந்த போட்டியை போலவே முதல் ஓவரில் அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார் இந்திய வீரர் புவனேஷ்வர் குமார். முதல் பந்தில் ஜேசன் ராய்யை அவுட் ஆக்கிய அவர், தனது அடுத்த ஓவரில் பட்லரை வெளியேற்றினார். அடுத்துவந்த வீரர்களில் மொயின் அலி மற்றும் டேவிட் வில்லி மட்டுமே முறையே 35 மற்றும் 33 ரன்கள் எடுத்தனர்.
மற்றவர்கள் இந்திய பௌலிங்கை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட் விழ, 17 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்த அந்த அணி 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரையும் 2 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் 3 விக்கெட்களையும், பும்ரா, சஹால் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர்.