ஆம்ஸ்டெல்வீன்: நடப்பு மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது. இருந்தும் இந்தியா காலிறுதியில் விளையாடும் வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.
15-வது மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறும். இந்திய அணி ‘பி’ பிரிவில் விளையாடியது.
முதல் சுற்றில் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் சீனாவுக்கு எதிரான ஆட்டத்தை சமனில் நிறைவு செய்தது. இருந்தும் கடைசி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் 3-4 என்ற கோல் கணக்கில் ஆட்டத்தை இழந்தது. அதனால் சீனா மற்றும் இந்திய அணிகள் சமமான புள்ளிகளை பெற்றன. இருந்தும் கோல்களின் வித்தியாசத்தில் சீனாவை பின்னுக்கு தள்ளி முதல் சுற்றில் மூன்றாவது இடம் பிடித்தது இந்தியன்.
அதன் பலனாக இப்போது காலிறுதிக்கு முந்தைய சுற்றான கிராஸ்-ஓவரில் விளையாட தகுதி பெற்றுள்ளது. வரும் 10-ஆம் தேதி நடைபெறும் இந்த கிராஸ்-ஓவர் போட்டியில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது இந்தியா. இதில் வெற்றி பெற்றால் காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா சந்திக்கும்.