விளையாட்டு

விம்பிள்டன் | "நான் அரையிறுதியில் விளையாடுவேனா என தெரியவில்லை" - நடால்

செய்திப்பிரிவு

லண்டன்: நடப்பு விம்பிள்டன் தொடரின் ஒற்றையர் ஆடவர் பிரிவு அரையிறுதி போட்டியில் தான் விளையாடுவேனா என்பது தனக்கு உறுதியாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார் டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரர் ரபேல் நடால்.

காலிறுதியில் அவர் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸுக்கு எதிராக விளையாடி இருந்தார். இந்த போட்டியில் நடால் 3-6, 7-5, 3-6, 7-5, 7(10)-6(4) என்ற செட் கணக்கில் ஆட்டத்தை வென்றார். சுமார் 4 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது இந்த போட்டி. உடல் உபாதையால் நடால் அவதிப்பட்டு வந்தார். அவரது அணியினர் ஆட்டத்தின் பாதியில் ரிட்டையர் ஆகும்படி சொன்னதாக போட்டி முடிந்ததும் அவரே சொல்லி இருந்தார்.

"அது மாதிரியான விஷயத்தை அறவே வெறுப்பவன் நான். அதனால் முடிந்தவரை மோதி பார்த்து விடலாம் என முடிவு செய்தேன். அதை செய்தேன்" எனத் தெரிவித்துள்ளார் அவர்.

அதோடு நடாலிடம் அரையிறுதியில் விளையாடுவீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. "எனக்கு தெரியவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த விஷயத்தில் என்னால் இப்போது பதில் அளிக்க முடியாதது. ஏனெனில் நான் ஏதேனும் ஒரு பதில் அளித்த பிறகு நாளை வேறு ஒன்று நடக்கலாம். அப்போது தான் பொய் சொன்னதாக ஆகிவிடும்" என பதில் அளித்தார் நடால்.

36 வயதான நடால், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் மொத்தம் 22 முறை பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். டென்னிஸ் உலகில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் நடால். நடப்பு ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன் தொடரின் சாம்பியனும் அவர் தான்.

நாளை ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் எதிர்த்து அரையிறுதியில் அவர் விளையாட வேண்டி உள்ளது. காலிறுதியில் அவர் வயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டார்.

SCROLL FOR NEXT