லண்டன்: "ஐ வில் மிஸ் யூ" என கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் தொடருக்கு தனது உருக்கமான பதிவு மூலம் பிரியாவிடை கொடுத்துள்ளார் சானியா மிர்சா. அரையிறுதி கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் தோல்வியைத் தழுவிய பிறகு இதனை அவர் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஜனவரி வாக்கில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கு பிறகு ஓய்வு குறித்து பகிரங்கமாக பேசி இருந்தார். இது தனது கடைசி சீசன் எனவும் அப்போது சொல்லி இருந்தார். இதையே இப்போது விம்பிள்டன் தொடரிலும் சானியா தெரிவிக்கும் வகையில் உள்ளது அவரது பதிவு.
விம்பிள்டனில் குரோஷியா (Croatia) வீரர் மேட் பேவிக் (Mate Pavić) உடன் இணைந்து விளையாடி இருந்தார். அரையிறுதியில் சானியா ஜோடி 6-4, 5-7, 4-6 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை இழந்தது. கடந்த 2015 விம்பிள்டனில் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது தான் விம்பிள்டனில் அவர் வென்றுள்ள ஒரே சாம்பியன் பட்டமாகும். விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இரண்டாவது சுற்று வரை 2005, 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் சானியா விளையாடி உள்ளார்.
"நம்மிடமிருந்து நிறைய எடுத்துக் கொள்கிறது இந்த விளையாட்டு. உடல், மனம் மற்றும் உணர்வு ரீதியாக என அதை சொல்லலாம். வெற்றி, தோல்வி, கடின உழைப்பு மற்றும் கடுமையான தோல்விகளுக்கு பிறகு தூக்கமில்லா இரவுகள் என நிறைய சொல்லலாம்.
ஆனால், பல பணிகளில் கிடைக்காத பலனை இந்த விளையாட்டு கைமாறாக தருகிறது. அதனால் நான் என்றென்றும் இதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நமது உழைப்பு இறுதியில் மதிப்புக்குரியதாக மாறுகிறது. இது நடப்பு விம்பிள்டன் குறித்தது மட்டும் அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக இங்கு விளையாடியதையும், வெற்றி பெற்றதையும் எண்ணி பெருமை கொள்கிறேன். ஐ வில் மிஸ் யூ. அடுத்த முறை சந்திக்கும் வரை" என தெரிவித்துள்ளார் சானியா.