துபாய்: டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி டாப் 10-இல் இடம் பிடிக்கத் தவறியுள்ளார். மறுபக்கம் ரிஷப் பந்த் இதே தரவரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தது. இதில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்தப் போட்டிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான அண்மைய பேட்டிங் தரவரிசையை வெளியிட்டுள்ளது ஐசிசி.
இதில் விராட் கோலி டாப் 10 இடத்தை இழந்துள்ளார். எட்ஜ்பாஸ்டன் போட்டியில் அவர் முதல் இன்னிங்ஸில் 11 மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 20 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அவரது மோசமான ஆட்டம் காரணமாக அவர் 13-வது இடத்திற்கு இப்போது பின் தள்ளப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் டாப் 10 டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். எட்ஜ்பாஸ்டன் போட்டியில் அவர் 146 மற்றும் 57 ரன்கள் எடுத்திருந்தார். மேலும், கடைசியாக அவர் விளையாடிய ஆறு டெஸ்ட் இன்னிங்ஸில் இரண்டு சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் அடங்கும்.
இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். மற்றொரு வீரர் ஜானி பேர்ஸ்டோ இதே பட்டியலில் 10-வது இடத்தை பிடித்துள்ளார். 2018-க்கு பிறகு அவர் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் ரோகித் சர்மா ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.