புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் அண்ணா கைப்பந்து கழகத்தின் பொன்விழாவை முன்னிட்டு தேசிய அளவிலான வாலிபால் போட்டி வரும் 8-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது. போட்டியை மாநில விளையாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கவுள்ளார்.
வடகாடு காவல் நிலையம் எதிரில் உள்ள மைதானத்தில் இரவு நேரத்தில் இப்போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவாக அணிகள் கலந்துகொள்ள உள்ளன. அதில், ஆண்கள் பிரிவில் கேரள காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஜிஎஸ்டி, பெங்களூர் அணி ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன. பெண்கள் பிரிவில் கேரளா கேஎஸ்இபி அணி, கேரளா காவல் துறை, சென்னை எஸ்ஆர்எம், சென்னை ஐசிஎப் ஆகிய அணிகள் கலந்துகொள்ள உள்ளன.
போட்டியில் ஒரே நேரத்தில் சுமார் 3,500 பேர் அமரும் வகையில் ஒரு பகுதிக்கு தலா 100 அடி நீளத்துக்கு 8 அடுக்குகள் என மொத்தம் 4 பகுதிகளிலும் கேலரி அமைக்கப்பட்டு வருகிறது. மைதானத்தில் இருளை பகலாக்கும் வகையில் 50-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. தவிர, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக ஆங்காங்கே வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தினமும் மாலையில் சுமார் 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை போட்டி நடைபெறும் எனவும், ஒவ்வொரு நாளும் சுமார் 25 ஆயிரம் பேர் பார்வையாளர்கள் வருவார்கள் எனவும் போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். அண்ணா கைப்பந்து கழகம் தொடங்கி 50-வது ஆண்டு விழாவாக இதை நடத்துவதால் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியை விரிவாக ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.
போட்டியை மாநில சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார்.
3 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ உள்ளிட்டோரும் கலந்துகொள்ள உள்ளனர்.
வெற்றி பெறும் அணியினருக்கு ரொக்கப் பரிசும், அண்ணா கைப்பந்து கழகத்தின் மறைந்த வீரர்களின் நினைவாக பரிசு கோப்பையும் வழங்கப்பட உள்ளது. போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை அண்ணா கைப்பந்து கழகத்தினர் செய்து வருகின்றனர்.