சானியா மிர்சா. 
விளையாட்டு

விம்பிள்டன் | கலப்பு இரட்டையர் அரையிறுதிக்கு முன்னேறியது சானியா மிர்சா ஜோடி

செய்திப்பிரிவு

லண்டன்: நடப்பு விம்பிள்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. முதல் முறையாக கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. 35 வயதான அவர் கடந்த 2003 முதல் டென்னிஸ் கோர்ட்டில் ராக்கெட் ஏந்தி விளையாடி வருகிறார். கடந்த 2008 வரையில் ஒற்றையர் பிரிவில் மிகவும் பிசியாக கிராண்ட் ஸ்லாம் உட்பட பல்வேறு சர்வதேச டென்னிஸ் தொடர்களில் விளையாடி வந்தார் சானியா. அதன் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டு இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகளில் அவர் விளையாடி வருகிறார்.

2013 வாக்கில் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் தலா 3 என மொத்தம் 6 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியாவின் உச்ச டென்னிஸ் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவர்.

இப்படி பல சாதனைகளை படைத்த அவர் கடந்த ஜனவரி வாக்கில் ஆஸ்திரேலிய ஒபனுக்கு பிறகு ஓய்வு குறித்து பகிரங்கமாக பேசி இருந்தார். இது தனது கடைசி சீசன் எனவும் அப்போது சொல்லி இருந்தார்.

இந்நிலையில், நடப்பு விம்பிள்டன் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது. இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையாக அறியப்படுகிறார் சானியா.

இப்போது அவர் விம்பிள்டனில் குரோஷியா (Croatia) வீரர் மேட் பேவிக் (Mate Pavić) உடன் இணைந்து விளையாடி வருகிறார். காலிறுதியில் சானியா ஜோடியினர் தங்களை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் ஜான் பீயர்ஸ் மற்றும் கனடா வீராங்கனை கேப்ரியலா டப்ரோவ்ஸ்கியை 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இந்தப் போட்டி நேற்று நடைபெற்றது. சானியா ஜோடி அரையிறுதியில் யாரை எதிர்த்து விளையாடுகிறார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. கடந்த 2015 விம்பிள்டனில் சானியா மிர்சா மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT