லண்டன்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள தன் தாய்நாட்டிற்கு ஆதரவாக நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான ரிப்பனை தனது ஆடையில் அணிந்து விம்பிள்டன் போட்டியில் விளையாடி உள்ளார் உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோ (Lesia Tsurenko). அவருக்கு அந்த அனுமதியை வழங்கும் வகையில் ஆடை கட்டுப்பாட்டை விம்பிள்டன் நிர்வாக அமைப்பு தளர்த்தியுள்ளதாக தெரிகிறது.
டென்னிஸ் உலகின் கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்று விம்பிள்டன். கடந்த 1877 முதல் நடத்தப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்தத் தொடரில் விளையாடும் வீரர்கள் வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிந்து விளையாடுவார்கள். அது ஒரு பாரம்பரிய நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இப்போது அதுதான் லெசியா சுரென்கோவுக்காக தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
போட்டியாளர்கள் முழுவதும் வெள்ளை நிறத்திலான ஆடையை மட்டுமே அணிய வேண்டும். இது வீரர்கள் கோர்ட்டுக்குள் நுழையும் தருணத்திலிருந்து பொருந்தும். அதில் வண்ணங்கள் ஏதும் இருக்கக் கூடாது என விம்பிள்டனில் வீரர்களுக்கான ஆடை கட்டுப்பாட்டு விதி சொல்கிறது. பாரம்பரிய வழக்கத்திற்காக இந்த ஏற்பாடு.
இந்நிலையில், விம்பிள்டன் ஒருங்கிணைப்பு குழுவை சில வீரர்கள் அணுகி ரஷ்ய நாட்டின் படையெடுப்பு மற்றும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அந்த நாட்டின் தேசிய கொடி வண்ணத்திலான ரிப்பனை அணிந்து விளையாட அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதன்பேரில் தற்போது இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
முன்னதாக, டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீராங்கனையான இகா ஸ்விடெக் (Iga Swiatek) உக்ரைனுக்கு ஆதரவாக நீலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான ரிப்பனை பிரெஞ்சு ஓபன் தொடரில் அணிந்து விளையாடினார். நடப்பு விம்பிள்டனின் முதல் சுற்றிலும் அவர் இதே பாணியை கடைபிடித்ததாக தெரிகிறது. இப்போது உக்ரைன் வீராங்கனை லெசியா சுரென்கோ, தன் தாய்நாட்டிற்கு ஆதரவாக விம்பிள்டனில் அதே பாணியை பின்பற்றி உள்ளார்.
கடந்த 27-ஆம் தேதி தொடங்கியது நடப்பு விம்பிள்டன் தொடர். இதில் டென்னிஸ் விளையாட்டு உலகின் முதல் நிலை வீரர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் நடப்பு விம்பிள்டன் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது சரியா? தவறா? என்ற பேச்சும் இப்போது எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.