இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் காலே கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னேவுக்கு எதிராக எல்பிடபிள்யூ (LBW) அப்பீலை ஆஸ்திரேலிய வீரர்கள் மேற்கொண்டனர். ஆனால் வார்னர் மட்டும் அவரை நோக்கி வந்த பந்தை லாவகமாக கேட்ச் பிடித்தார். இறுதியில் வார்னருக்கு தான் வெற்றி கிடைத்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கை நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இப்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகின்றன. நேற்று இந்தத் தொடரின் முதல் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 212 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தற்போது அந்த ரன்களை ஆஸ்திரேலிய அணி டிரையல் செய்து வருகிறது.
இலங்கை அணி பேட் செய்த போது 30-வது ஓவரை நாதன் லயன் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை கேப்டன் கருணரத்னே எதிர்கொண்டார். ரவுண்ட் தி விக்கெட்டாக அந்த பந்தை லயன் வீசி இருந்தார். அதை முன் நகர்ந்து ஆட முயன்றிருப்பார் கருணரத்னே. ஆனால் பந்து அவரது பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜ் ஆகி, பின்னர் பேடில் பட்டு ஸ்லிப் திசை நோக்கி சென்றிருக்கும். ஆனால், அதற்கு ஆஸ்திரேலிய வீரர்கள் நடுவரிடம் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர்.
மறுபக்கம் வார்னர் அந்தப் பந்தை லாவகமாக தாவி கேட்ச் பிடித்திருப்பார். அது கிரிக்கெட்டை விளையாட்டு குறித்த அவரது புரிதலை காட்டும் வகையில் அமைந்துள்ளது. இந்த தொடர் வார்னே - முரளிதரன் தொடர் என அழைக்கப்படுகிறது.