டப்லின்: வரும் நாட்களில் அயர்லாந்து கிரிக்கெட் வீரர் டெக்டர் ஐபிஎல் விளையாட ஒப்பந்தம் செய்யப்படலாம் என இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அயர்லாந்து அணி நிர்ணயித்த 109 ரன்கள் என்ற இலக்கை மிகச் சுலமபாக எட்டி பிடித்தது இந்திய அணி. இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு அயர்லாந்து வீரர் ஹேரி டெக்டரை மனதார பாராட்டியுள்ளார் கேப்டன் ஹர்திக்.
அயர்லாந்து அணி 12 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதில் டெக்டர் மட்டுமே தன் தரப்பில் 64 ரன்கள் குவித்தார். வெறும் 33 பந்துகளில் இந்த ரன்களை அவர் எட்டியிருந்தார். ஒரு பக்கம் அயர்லாந்து அணி பேட்ஸ்மேன்கள் இந்திய பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவித்தனர். ஆனால், டெக்டர் மட்டும் வேறு ஏதோ ஓர் ஆடுகளத்தில் விளையாடுவது போல சுலபமாக ரன் குவித்துக் கொண்டிருந்தார். இந்திய பவுலர்களின் லூஸ் பால்களை சரியாக டார்கெட் செய்து ரன் குவித்தார். அவரது இன்னிங்ஸில் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
"அவர் மிகவும் அற்புதமான ஷாட்களை விளையாடுகிறார். நான் எனது பேட்டை அவருக்கு கொடுத்துள்ளேன். அவர் மேலும் பல சிக்ஸர்களை விளாசலாம். அவருக்கு 22 வயது தான் ஆகிறது. வரும் நாட்களில் டெக்டர் ஐபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்படலாம். அவருக்கு முறையான வழிகாட்டுதல் தேவை. கிரிக்கெட் மட்டுமின்றி தனது வாழ்வு முறையை புரிந்து கொள்வதும் அவசியம். அதை அவர் மேனேஜ் செய்து விட்டால் ஐபிஎல் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள லீக் தொடர்களில் விளையாடலாம்" என பாண்டியா தெரிவித்துள்ளார்.