பெங்களூரு: 2021-22 சீசனுக்கான ரஞ்சிக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது மத்திய பிரதேசம். அந்த அணி முதல் முறையாக இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் டொமஸ்டிக் கிரிக்கெட் தொடர்களில் முதன்மையானது ரஞ்சிக் கோப்பை. இந்த தொடரின் இறுதிப் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் பலப்பரீட்சை செய்தன. இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாகும். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டி கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இரு அணி வீரர்களும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தங்களது திறனை இந்த போட்டியில் வெளிப்படுத்தி இருந்தனர். அதில் மத்திய பிரதேச அணி வீரர்களின் கை கொஞ்சம் ஓங்கி இருந்தது.
மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தது. மும்பை வீரர் சர்பராஸ் கான் சதம் பதிவு செய்திருந்தார். தொடர்ந்து விளையாடிய மத்திய பிரதேச அணி 536 ரன்களை குவித்தது. யாஷ் தூபே, ஷுபம் சர்மா, ரஜத் பட்டிதார் என மூவரும் சதம் விளாசி இருந்தனர். மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸை 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடங்கியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்ஸில் 269 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. வெறும் 108 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது மத்திய பிரதேச அணி.
29.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது மத்திய பிரதேசம். இந்த வெற்றியின் மூலம் முதல் முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்று சரித்திர சாதனையை படைத்துளளது. அதுவும் ரஞ்சிக் கோப்பையை 41 முறை வென்றுள்ள மும்பையை அணியை வீழ்த்தி இந்த வெற்றியை சாத்தியம் செய்துள்ளது அந்த அணி. தொடர் நாயகன் விருதை மும்பை வீரர் சர்பராஸ் கான் வென்றார். ஆட்ட நாயகன் விருதை மத்திய பிரதேச வீரர் ஷுபம் சர்மா வென்றார்.