விளையாட்டு

“அது ஒரு முட்டாள்தனமான ஆட்டம்” - நிக்கோலஸின் சர்ச்சை அவுட் குறித்து லீச் கருத்து

செய்திப்பிரிவு

லண்டன்: 'அது ஒரு முட்டாள்தனமான ஆட்டம்' என்று நிக்கோலஸின் சர்ச்சை அவுட் குறித்து இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் தெரிவித்துள்ளார்

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து 83 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன் காரணமாக களத்தில் பேட்ஸ்மேன்களாக இருந்த நிக்கோலஸ் மற்றும் மிட்செல் இருவரும் இணைந்து மிகவும் நிதானமான ஆட்டத்தை விளையாடினர். ஆட்டத்தின் 56-வது ஓவரை ஜாக் லீச் வீசினார்.

அந்த ஓவரின் இரண்டாவது பந்தை அவர் வீசும்போது, அதை எதிர்கொண்ட நிக்கோலஸ் அம்பயருக்கு நேராக அடித்தார். அவர் அடித்த அந்த பந்து எதிர் திசையில் ரன்னராக நின்றுகொண்டிருந்த மிட்செல் நோக்கி வந்தது. இதனால் மிட்செல் தன்னை நோக்கி பந்து வருவதாக நினைத்து பேட்டை மேலே தூக்கினார். அப்போது பந்து அவரது பேட் மீது பட்டு பீல்டிங் செய்து கொண்டிருந்த லீஸ் வசம் சென்றது. அவர் அதை பிடிக்க உடனே விக்கெட்டாக அறிவிக்கப்பட்டது. இதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால் பந்துவீசிய லீச் கூட என்ன நடந்தது என தெரியாமல் முழித்தார்.

இந்த நிலையில்தான், சர்ச்சையான அந்த விக்கெட் குறித்து லீச் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லீச் கூறுகையில், ''இப்படியான விக்கெட்டிற்கு அனுமதி உண்டு என்பதே எனக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த ஆட்டமிழப்பு முறை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நான் நிக்கோலஸ்க்கு சிறப்பாக பந்துவீசினேன், அவ்வளவு தான். ஒரு முட்டாள்தனமான ஆட்டத்தை நாங்கள் விளையாடி இருக்கிறோம் என்றுதான் என்னை நினைக்க வைத்திருக்கிறது.இது சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT