புது டெல்லி: பன்னாட்டு கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா) அண்மையில் வெளியிட்ட கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் இந்திய ஆடவர் கால்பந்து அணி 104-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்திய மகளிர் கால்பந்து அணியும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஆடவர் கால்பந்து அணி அண்மையில் நடைபெற்ற ஆசிய கால்பந்து கோப்பைக்கான தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பை மூன்றாவது தகுதி சுற்றின் மூலம் உறுதி செய்தது. அதன் மூலம் தற்போது சர்வதேச அளவிலான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி சுற்றில் வெற்றி பெற்றதன் மூலம் 106-வது இடத்தில் இருந்த இந்திய அணி இரண்டு இடங்கள் முன்னேறி உள்ளது. இருந்தாலும் ஆசிய அளவிலான கால்பந்து அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா 19-வது இடத்திலேயே தொடர்ந்து நீடித்து வருகிறது. சேத்ரி தலைமையிலான அணி அடுத்தடுத்த முறை ஆசிய கால்பந்து கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது.
பிரேசில், பெல்ஜியம், அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் ஆகிய அணிகள் இந்த தரவரிசையில் டாப் 10 இடங்களில் உள்ளன. சர்வதேச அளவில் இந்த தரவரிசையில் அதிகபட்சம் 11 இடங்கள் முன்னேறி அசத்தியுள்ளது கஜகஸ்தான் அணி.
மறுபக்கம் இந்திய மகளிர் கால்பந்து அணி 59-வது இடத்திலிருந்து 56-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய ஆடவர் கால்பந்து அணியில் ஜோசியர் ஒருவரை நியமித்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. அது குறித்து விரிவாக வாசிக்க > இந்திய ஆடவர் கால்பந்து அணி | அதிர்ஷ்டத்திற்காக ஜோதிடரை ரூ.16 லட்சத்திற்கு பணியமர்த்திய நிர்வாகம்?!