சென்னை: இந்திய புட்சால் சங்கம் சார்பில் தேசிய அளவிலான புட்சால் கால்பந்து தொடர் சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்றது.
இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான சிறுவர்கள் பிரிவில் சென்னை அணி 2-வது இடம் பிடித்தது. 16 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் சென்னை அணி லீக் சுற்றில் மேற்கு மகாராஷ்டிரா, தெலங்கானா, மும்பை அணிகளை தோற்கடித்திருந்தது.
நாக் அவுட் சுற்றில் டை பிரேக்கரில் 3-2 என்ற கோல் கணக்கில் ஹரியாணாவையும், மும்பை அணியை 8-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியிருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 3-4 என்ற கோல் கணக்கில் புதுச்சேரியிடம் தோல்வியடைந்து 2-வது இடம் பிடித்தது. சென்னை அணிக்கு கவிராஜ், இளந்தமிழன் ஆகியார் பயிற்சியாளர்களாக செயல்பட்டிருந்தனர்.
2-வது இடம் பிடித்த சென்னை அணியில் இருந்து திலிராஜ், லியோனார்டோ, சித்திக், விபிஷ், பிரபஞ்சன், சாகர் ஆகிய 6 வீரர்கள் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான புட்சால் உலகக் கோப்பை இந்திய அணியின் பயிற்சி முகாமுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான புட்சால் உலகக் கோப்பை தொடரானது வரும் நவம்பர் மாதம் சிலி நாட்டில் நடைபெற உள்ளது.