விளையாட்டு

டெஸ்ட்டில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் நிறைவு: வீடியோ தொகுப்பை பகிர்ந்த விராட் கோலி

செய்திப்பிரிவு

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளது. அந்த நினைவை கொண்டாடும் விதமாக வீடியோ தொகுப்பு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கோலி.

கடந்த 2011, ஜூன் 20-ஆம் தேதியன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அறிமுகமானார் கோலி. அதற்கு முன்னர் ஒருநாள் மற்றும் டி20 பார்மெட்டுகளில் அவர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். இருந்தாலும் கிரிக்கெட்டின் அசல் பார்மெட்டில் அவர் விளையாட சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய சூழல்.

அவரது காத்திருப்புக்கு இதே நாளில் தான் பலன் கிடைத்தது. இதுவரை 101 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார் கோலி. அதன் மூலம் 8043 ரன்கள் குவித்துள்ளார். இதில் 27 சதங்கள் அடங்கும்.

மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவராக விராட் கோலி அறியப்படுகிறார். களத்தில் அவர் எடுக்கின்ற ஒவ்வொரு ரன்னும் சாதனை ஓட்டங்களாக அமைகிறது. அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சிறப்பான பல வெற்றிகளை பெற்றுள்ளது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் இந்திய அணி அவரது தலைமையில் தான் விளையாடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளதை குறிப்பிடும் வகையில் வீடியோ தொகுப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார் கோலி. அதில் அவரது தரமான டெஸ்ட் இன்னிங்ஸ் அனைத்தும் ஸ்லைட் ஷோ போல ஒவ்வொன்றாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 742 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார் விராட் கோலி. வரும் நாட்களில் அவர் மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறுவார் என நம்புவோம். விரைவில் தனது அடுத்த சதத்தை கோலி பதிவு செய்யட்டும். அந்த காட்சியை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு வெகு நாட்களாக வெயிட்டிங்கில் உள்ளனர்.

SCROLL FOR NEXT