கொழும்பு: களத்தில் ஒரு கணம் ஃபீல்டராக மாறி பந்தை கேட்ச் பிடிக்க முயன்றார் நடுவர் குமார் தர்மசேனா. அந்தக் காட்சி தற்போது இணைய வெளியில் வைரலாகி உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன.
மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 291 ரன்களை குவித்தது.
ஆஸ்திரேலிய அணி பேட் செய்த போது 35-வது ஓவரில் அலெக்ஸ் கேரி, பந்தை லாஃப்ட் ஷாட் ஆடி லெக் சைடில் விரட்டி இருப்பார். அவர் அடித்த பந்து லெக் சைடில் ஃபீல்டிங் பணியை கவனித்துக் கொண்டிருந்த நடுவர் குமார் தர்மசேனாவை நோக்கி செல்லும். அவரும் ஒரு கணம் தான் நடுவர் என்பதை மறந்து, பந்தை கேட்ச் பிடிக்கும் நோக்கில் அவர் ஆக்ஷனில் இறங்கி இருப்பார். இருந்தும் கடைசி நொடியில் பந்தை கேட்ச் பிடிக்காமல் தவிர்த்திருப்பார். பந்தும் அவருக்கு சில அடிகள் முன்னதாக வீழ்ந்திருக்கும். அது தான் இப்போது வைரலாகி உள்ளது.
இலங்கை அணிக்காக 31 டெஸ்ட் மற்றும் 141 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.