பெங்களூரு: ''வயதை பார்க்காதீர்கள். பெர்பாமென்ஸை பாருங்கள்'' என்று தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக பேசியுள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர்.
இந்திய அணிக்காக இதுவரை டி20 கிரிக்கெட்டில் 97 வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். டி20 பார்மெட்டுக்கான இந்தப் பட்டியலில் இந்திய அணிக்காக நான்காவது வீரராக அறிமுகமானவர் தான் தினேஷ் கார்த்திக் (டிகே). இந்திய அணி விளையாடிய முதல் சர்வதேச டி20 போட்டியில் விளையாடியவர். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2006 டிசம்பர் 01-ஆம் தேதியன்று நடைபெற்ற போட்டி அது. அதில் 28 பந்துகளில் 31 ரன்கள் குவித்து அசத்தினார் டிகே. அந்தப் போட்டி நடந்து முடிந்து சுமார் 15 ஆண்டு காலம் கடந்துவிட்டது. இன்றும் இந்திய அணியில் அவர் விளையாடி வருகிறார். அவருடன் அந்தப் போட்டியில் விளையாடிய வீரர்கள் அனைவரும் ஓய்வு பெற்று விட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடிவரும் அவர், நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் பினிஷிங்கில் சிறந்த பெர்பாமென்ஸை வெளிப்படுத்த இந்திய டி20 அணியில் இடம் கிடைத்தது. தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இரண்டு ஆட்டங்களில் முக்கியமான கட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றார். நேற்று 27 பந்துகளில் அரைசதம் கடந்து தனது உச்சகட்ட பார்மை நிரூபித்தார். இதனால் உலகக் கோப்பைக்கான அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பான கேள்விக்கு சமீபத்தில் பதிலளித்த கவுதம் கம்பீர், "2022 டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. அதற்குள் இதைச் சொல்வது கொஞ்சம் சவாலானது. அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு கடைசி மூன்று ஓவர்களில் மட்டுமே விளையாடுவது போதாது. அணியில் விளையாடும் டாப் 7 வீரர்களில் ஒருவர் பந்து வீச வேண்டும் என இந்திய அணி விரும்பும். அக்சர் படேல் ஏழாவது வீரராக விளையாடினால் ஒரு பேட்ஸ்மேன் இந்திய அணியில் குறைவாக இருப்பது போல ஆகிவிடும். அந்த மாதிரியான சூழலில் கார்த்திக்கை விட தீபக் ஹூடா போன்ற இளம் வீரருக்கு நான் வாய்ப்பு வழங்குவேன்." என்று பேசியிருந்தார்.
கம்பீரின் இந்தக் கருத்துக்கு மறைமுமாக பதில் கொடுத்துள்ளார் சுனில் கவாஸ்கர். அதில், "டிகே விளையாடாதபோது, அவரை எப்படி அணியில் சேர்க்கலாம் என்று மக்கள் பேசுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அவரால் விளையாட முடியாது என்று எப்படி சொல்ல முடியும். அவர் நீங்கள் விரும்பும் ஒருவராக இல்லாமல் போகலாம். ஒருவரின் விருப்பம், பெயர் போன்றவற்றை பார்க்காமல் ஃபார்மைப் பார்த்து தேர்ந்தெடுங்கள்.
தினேஷ்க்கு அதிக வாய்ப்புகள் வருவதில்லை. 6வது அல்லது ஏழாவது இடத்தில் தான் இறங்குகிறார். அந்த இடத்தில் இறங்கி தொடர்ந்து அரைசதம் அடிக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. 20 பந்துகளில் நல்ல 40 ரன்களை எடுப்பதை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். மீண்டும் இந்தியாவுக்காக குறிப்பாக உலகக் கோப்பையில் விளையாட ஆசைப்படுகிறார். ஒருவேளை இது அவருடைய கடைசி உலகக் கோப்பையாக இருக்கலாம் என்பது உறுதியாகத் தெரிகிறது. எனவே அவரின் வயதை பார்க்காதீர்கள். பெர்பாமென்ஸை பாருங்கள்" என்று சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.