ராஞ்சி: இந்திய நாட்டுக்காக விளையாடுவதை தன் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாக பார்ப்பதாக தெரிவித்துள்ளார் இந்திய அணியில் விளையாட தேர்வாகியுள்ள ராகுல் திரிபாதி. 31 வயதான அவர் அயர்லாந்து தொடரில் விளையாட தேர்வாகி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. 17 வீரர்கள் அடங்கியுள்ள இந்த அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த அணியில் ராஞ்சியைச் சேர்ந்த ராகுல் திரிபாதியும் தேர்வாகி உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 76 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 1798 ரன்கள் சேர்த்துள்ளார் அவர். அதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களில் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனாக அறியப்படுகிறார் அவர்.
"நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். எனது கனவு பலித்துள்ளது. கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு வீரரும் தன் நாட்டுக்காக விளையாட வேண்டுமென விரும்புவார்கள். நாட்டுக்காக விளையாடுவதை என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாக பார்க்கிறேன். வரும் நாட்களில் மேலும் பல நல்ல விஷயங்கள் நடக்க உள்ளன.
நாட்டுக்காக நான் விளையாடி அணியை வெற்றி பெற செய்யும் நாட்கள் வரும். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வாய்ப்பு கிடைக்கும் என்பதை நான் அறிவேன். தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் நான் இடம் பெறாதது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார் ராகுல் திரிபாதி.
அண்மையில் முடிந்த 15-வது ஐபிஎல் சீசனில் 14 போட்டிகள் விளையாடி 413 ரன்கள் குவித்திருந்தார் அவர். அவரது பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 158.24. அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைத்தால் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அறிமுக வீரராக விளையாடுவார்.